Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள் பார்க்க மறவாதிர்கள்...!


ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.

கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசனைகளை இங்கே தருகிறோம்.
அல்லாஹ் உங்களின் வாழ்க்கையை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக.

01) மனைவியை சந்திக்கும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.

02) வீட்டினுள் நுழையும்போது சலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். சலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.

03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.

04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.

05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.

06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.

08) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்னைகளை மறக்கடியுங்கள்.

10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.

11) பிள்ளைகளைப் பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.

12) இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.

14) குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.

15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)

16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.

17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..

18) திருமணம் முடித்தபின் தன் மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தன் கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.

19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.

20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.

21) அழகாக காட்சியளியுங்கள். சுத்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.

22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.

23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.

24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன. நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்).

25) தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடந்து கொள்ளாதீர். நபியவர்கள் கூறினார்கள் “நான் என் மனைவியருக்கு மிகச் சிறந்தவன்”.

26) அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவள் முன்னிலையில் செய்ய வேண்டாம்.

27) அவளுக்கு அறிவுரை வழங்கும்போது தனிமையில் அறிவுரை வழங்குங்ககள். பிறர் முன்னிலையில் அவளது குறைகளை எடுத்துக்கூறாதீர்கள். அனைவரிடமும் குறைகள் உண்டு. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

28) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.

29) அதிர்ச்சியூட்டக்கூடிய சந்தோஷங்களை கொடுங்கள். அவளுக்கு மிக விருப்பமான ஒன்றை செய்யலாம்.

30) உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் அவளிடம் ஆலோசனை கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.

31) எப்போதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியில், கடைத்தெருவில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் அதே போன்று அவளுக்கும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.

32) அவ்வப்போது அவளுக்கு உணவுகளை ஊட்டியும் விடுங்கள்.

33) உங்களுக்கு இருக்கும் அந்தஸ்தில் அவளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குதிரையில் அவளையும் உட்கார வைக்கலாம். அது அவளது உள்ளத்தை குளிரவைக்கும்.

34) உங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவு வேண்டாம். அதன் விளைவு கொடியது.

35) எல்லா நல்ல விஷயங்களிலும் அவளைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டைச் செயலிலும் காட்டுங்கள்.

36) அவளது குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்திருங்கள். அவர்களை மதித்துப் பழகுங்கள்.

37) அவளது குடும்பத்தார் முன்னிலையில் அவளைப் பாராட்டிப் பேசுங்கள்.

38) அவள் தனக்கு கிடைத்த அருட்கொடை என்பதாக அவளுக்கு உறுதிப்படுத்துங்கள்.

39) இருவரும் அவ்வப்போது பரிசுகளை, அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம். பரிசுகள் அன்பை வளர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.

40) முக்கியமாக இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். புரிந்துணர்வு தவறும் போதே பிரச்சினை உருவாகிறது.

41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.
42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.

43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவற்றின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.

44) வீட்டை விட்டு வெளியே போகும்போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும்போது என்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.

46) இருவரும் ஒருவருக்கொருவர் இறைவனுக்கு இணங்கிவாழும் (இபாதத்) விஷயத்தில் உதவி ஒத்தாசையாய் இருங்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக).

47) முடிந்த வரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்.

49) வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்கள், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதற்காக நம் மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.

50) நம் உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியாவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

51) அடிக்கடி (தலைவலி தராத) நல்ல வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள். நல்ல வாசனையை பெண் விரும்புவாள்

52) காலையில், மாலையில், இரவு வேளைகளில் பற்களை துலக்கவும். குறைந்த பட்சம் இருமுறையாவது துலக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மனைவியன் பக்கத்தில் சென்று பேசும் போது வாய் துர்நாற்றம் வீசாது.

53) தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சகல விதத்திலும் சுத்தமாக இருங்கள். முக்கியமாக நாற்பது நாட்களுக்கு ஒருமுறையேனும் மர்ம உறுப்பு, அக்குள் ஆகியவற்றிலுள்ள முடிகளை அகற்றி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

54) நீங்கள் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். ((மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள் : நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளையும் அணியச்செய்வதும், அவளது முகத்தில் அறையாமல் இருப்பதும், அவளை இழிவு படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர அவளை வெளியிடங்களில் எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்காமல் இருப்பதும் கணவனின் கடமை என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.)

55) அறியாமைக்கால நடைமுறை போன்று அவளை மாதவிடாய் காலங்களில் அன்றாட கூட்டுப்பணிகளில் ஒதுக்கி விட வேண்டாம்.

56) மனைவி ஆசையோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு தன்னை நெருங்கும் போது நீங்கள் எப்படிப்பட்ட களைப்பில் அசதியில் இருப்பினும், உங்களின் பிரச்சினையை அறியாத அந்த அழகிய மனைவியின் ஆசைக்கு கொஞ்ச நேரம் ஈடு கொடுங்கள்.

57) தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி கண்ட பிறகு தான் ஓய்வெடுக்க வேண்டும். அவளின் ஆசையை நிறைவு செய்யும் போது ஏற்படும் சுகம் கணவனுக்கு அதிகமாக இருக்கும். எனவே, முதலில் அவளின் தேவையை பூர்தி செய்ய வேண்டும்

58) “பிஸ்மில்லாஹ்” சொல்லி எல்லா விஷயங்களையும் ஆரம்பியுங்கள். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதுகூட ‘பிஸ்மில்லாஹ்”வுடன் சேர்த்து அதற்கான துஆவையும் ஓதிக்கொள்ளலாம். அதனால் பிறக்கும் குழந்தை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்படுகிறது.

59) உங்கள் மனைவியின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மற்றும் அவளுடைய குடும்பத்தாரைப்பற்றி குறைவாகவும் ஏளனமாகவும் பேசாதீர்கள். அவ்வாறு தவறு ஏதாவதை சுட்டிக்காட்ட வேண்டுமாயின் அதனை பக்குவமாக எடுத்து அன்பாக விளக்கிக்கொடுங்கள்.

60) உங்கள் குடும்பத்தாரிடம் அவளைப் பற்றி பெருமையாக பேசுங்கள்.அதனால் உங்களது குடும்பத்தினர் அவளை மதிப்பார்கள். அவளைப் பற்றி அவர்களிடம் ஏளனமாக பேசும்போது அவர்கள் அவளை மதிக்கத் தவறுவார்கள்.

61) வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். மாதம் ஒரு முறை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இஸ்லாம் அனுமதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.

62) வாரம் ஒரு முறை தனியாக வெளியில் சென்று அவளோடு மனம் விட்டுப் பேசுங்கள்.

63) மனைவிக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் ஏனைய பொருட்களை அவளுடன்
சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.

64) வெளியில் சென்று இரவில் நேரம் தாமதம் ஆகாமல் வீட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். பொதுவாக மனைவி தன் கணவன் வீட்டுக்கு வரும்வரை சாப்பிடாமல் காத்துக்கொண்டிருப்பாள். இதுவே கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.

65) தனக்கு பிடித்ததுதான் அவளுக்கும் பிடிக்கும் என்று எண்ணாதீர்கள். அவளுக்கும் ஆசைகள் பல இருக்கும். அதனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இருவருக்கும் பிடித்திருப்பது ஒன்றென்றால் அது நீஙகள் செய்த பாக்கியம்.

66) திருமணத்தின் பின்னுள்ள வாழ்க்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவது வழக்கம். அதில் நீங்கள்தான் வெல்ல வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இருவருமே வாழ்க்கையில் தோற்று விடுவீர்கள். அதனால் அவளது கருத்து பிழை என்ற போதிலும் மௌனமாக இருந்து பின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அந்த விஷயத்தைப்பற்றி மறைமுகமாக உங்களின் கருத்தை தெரிவியுங்கள். ஏனென்றால் பெண்கள் பொதுவாக அனைத்திலும் தான் செய்வதுதான் சரி என்று எண்ணும் இயல்பு. உடையவர்கள். அதனை நேரடியாக சொன்னால் சில சமயங்களில் கோபம் அதிகமாகும். அதன் விளைவு விவாகரத்துவரைகூட செல்லலாம்.

67) வெளியில் நீங்கள் எவ்வாறான பிரச்சினைகளை சந்தித்தாலும் வீடு திரும்பும் போது அழகிய புன்னகையோடு சலாம் சொல்லி விட்டிற்குள் நுழையுங்கள். கைகளை பற்றிப்பிடியுங்கள்.

68) திருமணம் முடித்த பின் மனைவியின் விஷயத்தில் மட்டுமல்லாது அவளது குடும்ப விஷயங்களிலும் பொறுப்பாக செயல்படுவது சிறந்தது.

69) உங்களால் முடிந்தால் வீடு திரும்பும்போது மனைவிக்கென்று ஏதாவது அவள் விரும்பிய உணவை அல்லது பானத்தை வாங்கிச்செல்லுங்கள்.

70) வாரத்திற்கு ஒருமுறையேனும் வெளியில் சென்று சாப்பிடுங்கள்.

71) அவளுடைய ஆசைகளை மறுக்காமல் கேளுங்கள். அதில் தவறு இருப்பின் உடனே கூறாமல் சற்று தாமதமாக்கி எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அதை சுட்டிக்காட்டுங்கள்.

72) மனைவியோடு பேசுவதற்காக நேரம் ஒதுக்குங்கள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு டீவியை பார்த்து பிறகு தூங்குவது கூடவே கூடாது. மனைவியிடம் அன்பாக பேச வேண்டும். அவ்வப்போது உடல் நலம் போன்றவற்றை விசாரிக்கவும்.

73) மனைவி தலைவலி, இடுப்புவலி, கால் வலி போன்ற நோய்களோடு இருக்கும் போது தனது ஆசையை பூர்த்தி செய்தாகவே வேண்டும் என்று எண்ணலாகாது. மாறாக அவளின் நோய்க்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஊதாரணமாக, தலைவலி என்றால் தலையை சற்று பிடித்து விடலாம்.

74) மனைவியோடு சில சில மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடலாம். “நபி (ஸல்) தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோடு விளையாடுவார்கள். இரு முறை ஓட்டப் பந்தயமும் நடந்தது”

75) தனது வருமானத்தைப் பற்றியும், அதிலிருந்து தான் செலவளிப்பதன் விவரம் பற்றியும் மனைவியிடம் பகிர்ந்துகொள்வது சிறந்தது. உங்கள் மனைவி ஸாலிஹாண (நல்ல) ஒருவராக இருந்தால் அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுவாள்.

76) நீங்கள் வெளிநாட்டிலும், மனைவி தாய் நாட்டிலும் இருந்தால் அவளோடு பேசுவதற்காக கணினியை பயன்படுத்துவது வழக்கம். அப்போது பேஸ்புக், டுவிட்டர், யாகு சட், போன்ற சமுக வலையமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் போக வேண்டாம் என்று அன்பாகக் கட்டளையிடுங்கள்.

77) மனைவியிடம் நம் நண்பர்களான பிற ஆண்களைப் பற்றி புகழ்ந்து, வர்ணித்து பேசாமல் இருப்பது மிக முக்கியமாகும். அதன் விளைவாக அன்பு அந்தப் பக்கம் திரும்பலாம். இதன் விளைவு கணவனுக்கே எதிராகலாம். இது குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.

78) அவளுடைய குறைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம். முக்கியமாக உடலுறவுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும் கூறாதீர்கள். உடலுறவில் அவளுக்கு இருக்கும் குறைபாடுகளை நண்பர்களிடம் ஏன் பெற்றோர்களிடமும் கூறவேண்டாம். அது அவளுக்கு செய்யும் மிகவும் கேவலமான துரோகமாகும்.அதற்கான ஆலோசனைகளை இருவருமாக சேர்ந்து மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளலாமே.

79) நீங்கள் கேட்கும் பயான்கள், ஹதீஸ்கள், நபித்தோழர்களின் வரலாறுகள், நல்ல விஷயங்கள் போன்ற அறிவுரைகளை அவளுக்கும் கூறுங்கள். முழுக்க முழுக்க மார்க்க அறிவுரைகளை ஆவலுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

80) முறையாக மனைவியை மற்றவர்களிடத்திலிருந்து மறைத்துக் கொள்ளுங்கள்.

81) இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட அழகிய ஆடைகளை அணியவையுங்கள், வாங்கி கொடுங்கள்.

82) திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட மஹ்ரமான ஆண்களோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் அனுமதிக்கலாகாது. இதில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

83) பெரிய தவறுகளுக்காக மட்டும் விசாரணை நடத்துங்கள். சிறு சிறு தவறுகளை இனிமேலும் செய்ய வேண்டாம் என்று பாசத்தோடு சொல்லுங்கள்.

84) பெண்கள் அதிகமாக நோய்வாய்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அடிக்கடி பலவீனம்ஏற்படும்போது ‘உனக்கு ஒரே நோய்தான், நோயாலயா ஒன்ன பெத்தாங்க” என்று எரிச்சலடையக்கூடாது. பாசத்தோடு அவளுக்கு தேவையான மருந்தை கொடுக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

85) ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அதற்கு பகராக இதுதான் சரி என்பதை அவள் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.

86) உணவில் உப்பு அதிகம் என்றாலோ ருசி இல்லை என்றாலோ மனைவியை திட்டாதீர்கள். அதனை நீங்கள் உண்டு முடியுங்கள். உறங்கப்போகும்போது அவளிடம் அந்த உணவின் நிலை பற்றி கூறி மறந்து விடுங்கள். பின் அவள் அதனைப்பற்றி கேட்கும் போது ‘இருந்த போதிலும் என் மனைவி சமைத்தது நன்றாகத்தான் இருந்தது” என்ன்ற வார்த்தை அவளை ஆறுதல் படுத்தலாம். அடுத்த முறை மிகவும் ருசியாக சமைக்க முயற்சி செய்வாள்.

87) அவளுடைய ஆசைகளை அல்லது உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.

88) இரகசியமான முறையில் அவளின் பிரச்சினையை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.

89) திருமணமான பின்பு மனைவியிடத்தில் தான் எதிர்பார்ப்பது இல்லையெனில் அதற்காக வருந்த வேண்டாம். அதனை அவளிடம் நல்லமுறையில் வேண்டுகோள் விடுங்கள். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வாள். அப்போதும் அவளால் முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமையோடு இருங்கள்.

90) தான் ஏதாவது தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொண்டு அவளிடம் வருத்தம் தெரிவியுங்கள். நிச்சயமாக அவளுடைய அன்பு அதிகரிக்கும்.

91) முந்திய காலங்களில் செய்த தவறுகளை அவளிடம் சுட்டிக்காட்ட வேண்டாம்.

92) மனைவி கோபமடையும் வேளை கணவன் அமைதியை கையாள வேண்டும் தானாகவே அவள் அமைதியாவாள்.

93) மனைவி கணவனைவிட அதிகமாகப் படித்திருக்கலாம், குறைவாகவும் படித்திருக்கலாம் .அவளுக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி நம்மிடம் கேட்கும் போது “உனக்கு இது கூட தெரியாதா?” என்றெல்லாம் அவளை இழிவு படுத்தாமல் முறையாக அவளை நெருங்கி அன்பாக விளக்கலாமே. அதனால் அவள் நம் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்கும்.

94) திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் மனைவிக்கும் கணவனின் தாய், சகோதரி ஆகியோர் இடையே பிரச்சினை வருவது சகஜம். அச்சந்தர்ப்பத்தில் கணவன் தன் தாய், சகோதரிகளின் பக்கம் மாத்திரம் சாய்ந்து பேசுவது முறையல்ல. நம்மை நம்பி வந்தவளே நம்மனைவி. அதனால் இரு தரப்பினருக்கும் நடுவராக நின்று பிரச்சினையை தீர்த்து வைப்பது அவசியமாகும். எத்தரப்பில் தவறு இருக்கிறதோ அதை அவர்களுக்கு உணர்த்தி இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்கி வைப்பது கணவன் மீது கட்டாய கடமையாகும். அதற்கான ஆற்றலை கணவன் பெற்றிருப்பது அவசியமாகும்.

95) விருந்துகளுக்கு அழைப்பு வந்தால் மனைவியையும் அழைத்துச் செல்லலாம். முக்கியமாக உங்களது குடும்ப விருந்துகளுக்கு கட்டாயமாக அவளையும் சேர்த்து அழைத்துச் செல்லலாமே. உங்களது குடும்பம் அவளை மதிக்க அது காரணமாக அமையும்.

96) வசதி படைத்தவர்கள் திருமணம் முடித்த பின் தம் குடும்பத்துடனோ, மனைவியின் குடும்பத்துடனோ ஒன்றாக வாழாமல் தனியாக ஒரு வீட்டை அமைத்துக்கொள்வது பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சிறந்தது. “விட்டு, விட்டு சந்தியுங்கள் அன்பை வளர்த்துக்கொள்ளலாம்” எனும் முதுமொழிக்கேற்ப ஒரு தனி வீட்டில் இருந்து அவர்களை விட்டு, விட்டு சந்தித்து நிரந்தரமாக பாசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியுமல்லவா!

97) பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பன்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன்முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். எனவே இவ்வாறான நற்குணங்களை மனைவியிடமிருந்து பிறக்கச் செய்வது கணவனின் கடமையல்லவா!

98) மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது “விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்” என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.

99) அல்லாஹ் ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.”யா அல்லாஹ்! எனது மனைவி, குழந்தை ஆகியோரில் எனக்கு கண்குளிர்ச்சியை தருவாயாக”, எனவே இந்த துஆவை நித்தமும் கேட்க நாம் தவறிவிடக் கூடாது.மனைவியை பார்க்கும் போது நமக்கு மனசந்தோஷம் கிடைக்க வேண்டும். மனைவியின் அழகு என்பது நிறத்தில் ஏற்பட்டது அல்ல.அவளை பார்க்கும் போது தனிப்பெரும் இன்பம் கிடைக்குமானால் அதுவே நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகு.

100) இறுதியாக மிக முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன், திருமண பந்தத்தில் இணையும் பெண்கள் இறுதிவரை குறிப்பிட்ட கணவனுடனேயே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு கணவன் தான் நேசிக்க வேண்டிய ஒரேயொரு பெண் தனது மனைவியாவாள். மாறாக அவன் கள்ளக் காதலிகளுடன் தொடர்ப்பு வைத்திருப்பது தனது மனைவிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.

எப்போது அவன் கள்ளக்காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வானோ அப்போதே வாழ்வில் அவனது நிம்மதியை இழந்து விடுகிறான்.தன்னை நம்பி வரக்கூடிய பெண்ணுடன் இறுதிவரை வாழ்பவனே உண்மையான மனிதன். பொதுவாக பெண்கள் இலகுவில் ஒருவரை விரும்ப மாட்டார்கள், விரும்பினால் இறுதிவரை அவருடனேயே வாழவேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.

ஆண்கள் அவ்வாறல்ல விவாகம் செய்த ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இன்னொருத்தியை விவாகம் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். விவாகரத்து செய்வது ஆகுமான ஒரு காரியம் தான். ஆனாலும் விவாகரத்து செய்யப்படக்கூடிய பெண்களது வாழ்க்கையின் நிலை என்ன ? அவர்களது பெற்றோர், சகோதரர்களது படும் பாடு ஆகியவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.இந்நிலை உங்கள் சகோதரி அல்லது மகளுக்கு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன என்பதை காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு ஆண்களும் சிந்திக்க வேண்டும்.

Post a Comment

0 Comments