Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பிறர் குறைகளை தேடாதிருப்போம்...!


இஸ்லாம் மனித சமுதாயத்தை நேர்வழியில் இட்டுச் செல்வதுடன் மனித வாழ்வின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் காத்திடும் உயர்ந்த மார்க்கமாகவும் விளங்குகிறது. ஒவ்வொரு முஸ்லிமினதும் உரிமைகளையும், கௌரவத்தையும், கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அல் குர்ஆனும் நபியின் வழிமுறைகளும் எமக்குக் காட்டி நிற்கின்றன.

முஸ்லிமின் நற்பண்புகளில் ஒன்று, தன் சகோதர முஸ்லிமுடைய கண்ணியத்தைப் பாதுகாப்பதாகும். பிறர் குறைகளை மறைப்பதும் அவரது கடமையே. திருமறையும், நபி மொழியும் முஸ்லிம்களின் குற்றம் குறைகளைத் துருவி ஆராய்ந்து அவர்களது கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்கும் பண்புடையோரை வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

‘எவர்கள் (இதற்குப் பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு’. (24:19)

என்றும்

‘எவருடைய குற்றத்தையும் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம்’. (49:12)

என்றும் அல் குர்ஆன் வலியுறுத்தியுள்ளது.

இந்த இறை வசனங்கள் இஸ்லாமிய சமூகத்தில் வாழ்பவர்கள் இழிவான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதன் அவசியத்தை எடுத்தியம்புகின்றன. குறிப்பாக பிறரது அந்தரங்கங்களைத் தேடாமலும், பிறர் குறைகளைப் பகிரங்கப்படுத்தாமலும் வாழ வேண்டும் என்பதே இங்கு எடுத்துரைக்கப்படுகிறது. இதே கருத்தை நபி (ஸல்) அவர்களின் வாக்கும் வலியுறுத்துகிறது.

‘ஓர் அடியானின் குறையை மற்றொரு அடியான் மறைத்தால் அவனது குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைத்து விடுவான்.

(ஆதாரம்- ஸஹீஹ் முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய தோழர்களில் யாரும் யாரைப் பற்றியும் எந்தக் குறையையும் என்னிடம் கொண்டுவந்து விடவேண்டாம். என்னுடைய உள்ளம் உங்கள் அனைவரைப் பற்றியும் நல்லெண்ணம் கொண்ட நிலையில் நான் உங்களிடம் வருவதையே விரும்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார்கள்.

(நபிமொழி)

அப்படியிருந்தும் எவர் மீதும் குறைகூறி பிறரது உள்ளத்தை இலகுவாக வேதனைப்படுத்தி விடுகின்றோம். இது இஸ்லாம் முற்றிலும் வெறுக்கும் செயலாகும்.

ஒரு தடவை ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘யாரசூலல்லாஹ்’ எந்த முஸ்லிமுடைய ஸலாம் சிறந்தது? எனக் கேட்க, ‘எந்த முஸ்லிமுடைய நாவை விட்டும், கரத்தை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனரோ அவருடைய ஸலாம் தான் சிறந்தது’ என்று கூறியதோடு. ‘நாவால் ஈமான் கொண்டு இதயத்தில் ஈமான் நுழையாதவர்களே! விசுவாசிகளை நோவினை செய்யாதீர்கள். பிறர் குறைகளைத் துருவி ஆராயாதீர்கள்.

எவன் தனது சகோதர முஸ்லிமின் குறையை துருவி ஆராய்கிறானோ அவனது கௌரவத்தை அல்லாஹ் அழித்து விடுவான். எவன் தனது சகோதரனின் குறையை ஆராய்கிறானோ அவன் தனது வீட்டுக்கு மத்தியில் இருந்தபோதும் அல்லாஹ் அவனைக் கேவலப்படுத்துவான் எனவும் எச்சரித்தார்கள்.

(நபிமொழி)

ஆகவே எவர் மீதும் குறைகூறி அவர்களை நோவினைப்படுத்துவதில் நின்றும் நாமும் தவிர்ந்து கொள்வோம். இஸ்லாம் வெறுத்துள்ள அந்த இழி குணத்திலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாத்திடட்டும்.

- யாழ் அஸீம் - 

Post a Comment

0 Comments