Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

பாலஸ்தீன பிரச்சினைக்கு முடிவுகாண ஒன்றுகூடும் அரபுலகம் : சவூதி தலைமையில் அவசர அரபு லீக் மாநாடு நவம்பர் 11 இல்

(காலித் ரிஸ்வான்)

அரபு நாட்டுத் தலைவர்கள் உச்சிமாநாட்டின் அவசர அமர்வொன்று நவம்பர் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அரபு லீக்கின் இந்த 32வது அமர்வு சவூதி அரேபியாவின் தலைமையிலேயே நடைபெறவுள்ளது.

காசா பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பற்றி கலந்துரையாடும் நோக்கோடு உச்சிமாநாட்டை நடாத்துமாறு பாலஸ்தீன் மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து திங்கட்கிழமை (30) தலைமைச் செயலகம் அதிகாரபூர்வ கோரிக்கையை பெற்றதாக அரபு லீக்கின் உதவிச் செயலாளர் தூதர் ஹொசாம் சகி தெரிவித்தார்.

கெய்ரோ நகரில் கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அரபு லீக் உச்சி மாநாடு நடைபெற்றதை தொடர்ந்து 20 நாட்களுக்குப் பிறகு அரபு லீக் நாடுகள் மீண்டும் ஒன்றிணைவது குறிப்பிடத்தக்க விடயமாகும். கெய்ரோவில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டின்போது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நிலவரம் பரபரப்பான விவாதமாக இருந்தது. ஈராக், சைப்ரஸ், ஜோர்டான், சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன.



ஜேர்மனி மற்றும் ஜப்பானின் பிரதிநிதிகளுடன் ஐ.நா பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பாலஸ்தீனியர்களின் பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

அரபு லீக் அவசர உச்சி மாநாடு நடைபெறவிருப்பதன் காரணமாக ரியாத் நகரைச் சூழ பாதுகாப்பை பலப்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் மற்றும் காசா பகுதியில் மனிதாபிமான நிலைமைகள் குறித்து கலந்துரையாட மாநில வெளியுறவு அமைச்சர்களும் கூடவுள்ளனர்.

மேலும், பாலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணும் வகையிலும் இராஜதந்திர முயற்சிகள் பல பகுதிகளிலும் சவூதி மேற்கொண்டுள்ளதாகவும், முன்னரே மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகள் தொடர்பிலேயே தொடர்ந்தும் கரிசனையோடு இருப்பதாகவும் சவூதி அமைச்சரவை அறிவித்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான தனது உரையாடல் பற்றி பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அமைச்சரவைக்கு விளக்குகையில்,

இந்த உரையாடலின்போது காஸாவின் நிலைமை தொடர்பான சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை அவர் வலியுறுத்திக் கூறியதாகவும் குறிப்பிட்டார்.



ஹமாஸுடனான அதன் தற்போதைய போரில், இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (31) காசா பகுதியில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது. அகதிகள் முகாமொன்றைத் தாக்கியதில் சுமார் ஐம்பது பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

சவூதி வெளியுறவு அமைச்சு இத்தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதுடன், அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேல் இராணுவம் குறிவைப்பதை சவுதி அரேபியா வன்மையாக கண்டிக்கிறது என்றும் அறிவித்தது. 1,400 இஸ்ரேலியர்களும் 8,500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் இதுவரை இப்போரில் பலியாகியுள்ளனர்.

சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான், உடனடி போர் நிறுத்தத்தை கோருவதற்காக திங்கட்கிழமையன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

எனவே, பல்லாயிரம் உயிர்களை காவு வாங்கியிருக்கும் இப்போருக்கான ஒரு முடிவைப் பெறும் முயற்சியாக நடைபெறவிருக்கின்ற இம்மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி...
வீரகேசரி
https://www.virakesari.lk/article/168266

Post a Comment

0 Comments