Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கத்தார்: தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய நாடு சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தி ஆனது எப்படி?



இருபத்தி ஏழு இலட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாடு மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் அதன் செல்வாக்கை அதிகரித்து வருகிறது.

மூன்று பக்கங்களிலும் பாரசீக வளைகுடாவால் சூழப்பட்ட இந்த நாட்டின் பரப்பளவு 11,581 சதுர கிலோமீட்டர் தான். தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய நிலப்பரப்பான இந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளின் வரைபடத்தில் ஒரு புள்ளி போல் தெரிகிறது.

ஆனால் கடந்த சில வருடங்களில் இந்த நாடு தனது ராஜதந்திரத்தை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது.

இன்று ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதில் கத்தாருடன் போட்டியிடக் கூடிய எந்த நாடும் உலகில் இல்லை.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் என்ற செய்தி, ஒருவேளை இந்தப் போரினால் எழுந்துள்ள மனிதாபிமான பிரச்னைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஹமாஸ் நான்கு நாட்களில் காஸாவில் இருந்து 50 பணயக்கைதிகளை விடுவிக்கும் என்பதுடன் இஸ்ரேல் 150 பாலத்தீன கைதிகளை விடுவிக்கும் எனத் தெரியவருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய முத்தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் கத்தார் பெரும் பங்கு வகித்துள்ளது.

அதே சமயம், மத்திய கிழக்கில் உள்ள இந்த சிறிய நாடு, அப்பிராந்தியத்தின் மறுக்கமுடியாத மத்தியஸ்தர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.



ஹமாஸ் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஒரு தற்காலிக முடிவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தி ஆனது எப்படி?

அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி பலரை பணயக் கைதிகளாகப் டித்ததில் இருந்து அவர்களை விடுவிக்க அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் கத்தார் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

இந்த முயற்சிகளின் விளைவாக அக்டோபர் 20 அன்று இரண்டு அமெரிக்கப் பெண் பணயக்கைதிகள் ஹமாஸிடம் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

இதற்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தன. இறுதியில் இரு தரப்பும் நான்கு நாள் போர் நிறுத்தம் என்பதுடன் பணயக்கைதிகளை விடுவிக்கவும் ஒப்புக்கொண்டன.

கத்தாரின் பங்கு பணயக்கைதிகளை மீட்பதில் மட்டும் முடிந்துவிடவில்லை. இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பதற்காக எகிப்துடனான எல்லையைத் திறப்பதில் இந்த நாடு முக்கிய பங்கு வகித்துள்ளது.

கத்தார் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இருதரப்புகளுடனும் உறவுகளைக் கொண்ட நாடு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2012 இல், ஹமாஸ் தனது அரசியல் அலுவலகத்தை கத்தார் தலைநகரான தோஹாவில் திறந்தது. ஹமாஸின் பல முக்கிய தலைவர்கள் தோஹாவில் வசிப்பதாக நம்பப்படுகிறது.

சமீபத்தில், ஹமாஸ் அலுவலகத்தை மூடுவதற்கு அமெரிக்கா கத்தாருக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தது.

ஆனால் ஹமாஸின் அரசியல் அலுவலகத்தின் நோக்கம் அப்பிராந்தியத்தில் பேச்சுவார்த்தைக்கான வழிமுறையாக இருப்பதே தவிர எந்த போரையும் அல்லது தாக்குதலையும் தூண்டுவது அல்ல என்று கத்தார் தெளிவுபடுத்தியது.

ஹமாஸுடன் பேச்சு நடத்துவதற்கான வழிகளைத் திறந்து வைத்திருப்பது முக்கியம் என்று இப்போது அமெரிக்காவும் இதைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கலாம் என்றும் கத்தார் கூறுகிறது.



2020 ஆம் ஆண்டு தோஹாவில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்தியஸ்தம் செய்வதில் கைதேர்ந்த கத்தார்..

கடந்த சில ஆண்டுகளின் உதாரணங்களைப் பார்த்தால், கத்தார் மத்தியஸ்தம் அல்லது பேச்சுவார்த்தைகளை எளிதாக்கும் நடவடிக்கைகளில் ஒரு தேர்ந்த நாடாகவே மாறியுள்ளது போல் தெரிகிறது.

2020 ஆம் ஆண்டில் கத்தார் தலைநகர் தோஹாவில் கையெழுத்திடப்பட்ட அமெரிக்கா - தாலிபன் அமைதி ஒப்பந்தம் இதற்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதன் கீழ் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

2013 ஆம் ஆண்டு தனது நாட்டில் அரசியல் அலுவலகங்களைத் திறக்க தாலிபன்களுக்கு அனுமதி வழங்கிய ஒரே நாடு கத்தார் மட்டுமே.

இந்த ஆண்டு செப்டம்பரில், ஐந்து அமெரிக்க கைதிகளும் ஐந்து இரானிய கைதிகளும் விடுவிக்கப்பட்ட உயர்மட்ட கைதிகள் பரிமாற்ற நடவடிக்கைக்கு கத்தாரின் மத்தியஸ்தம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஐந்து அமெரிக்க கைதிகளும் டெஹ்ரானில் இருந்து தோஹாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு அக்டோபரில், கத்தாரின் முயற்சியின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ், ரஷ்யா நான்கு யுக்ரேனிய குழந்தைகளை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது.

கத்தாரின் மத்தியஸ்த முயற்சிகள் இதுவரை பல வெற்றிகளைக் கொடுத்துள்ளன. டார்பூரில் தோஹா சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கும், எரித்ரியாவில் ஜிபூட்டியின் போர்க் கைதிகளை விடுவிப்பதற்கும், சிரியாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், லெபனானில் அதிபர் மாளிகைப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கத்தாரின் மத்தியஸ்தம் முக்கிய பங்கு வகித்துள்ளது.



பளபளக்கும் கட்டடங்களுடன் பெரும் செல்வம் புரளும் நகராக தோஹா அமைந்துள்ளது.

மத்தியஸ்தருக்கான தகுதிகளை கொண்டுள்ள கத்தார்...

டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அமைதி மற்றும் மோதல் தீர்வுக்கான நெல்சன் மண்டேலா மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

எந்தவொரு மத்தியஸ்தத்திற்கும் நடுநிலையாளர் நடுநிலையாகவும் இரு தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருப்பது அவசியம் என்று அவர் கூறுகிறார்.

"அதே நேரத்தில், மத்தியஸ்தரின் நடுநிலைமையைத் தகுதியற்றதாக்கும் எந்த ஒரு வரலாற்றுப் பின்புலமும் இருக்கக்கூடாது," என்று அவர் கூறுகிறார். "பேச்சுவார்த்தைகளை நிலைநிறுத்துவதற்கு பரந்த நிதி ஆதாரங்கள் தேவை. மத்தியஸ்தரிடம் இது போன்ற வசதிகள் இருக்கவேண்டும்."

"கூடுதலாக, உள்நாட்டுப் பிரச்சினைகளைச் சமாளிப்பதில் ஒரு தனித்திறன் மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசுகளுடனான நல்ல உறவுகளும் ஒரு மத்தியஸ்தருக்கு உதவியாக இருக்கும். கத்தார் இந்த அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறது."

தொடர்ந்து பேசிய டாக்டர் மிஸ்ரா, "கத்தாருக்கு ஒரு சார்பான நோக்கம் அல்லது எந்த ஒரு தரப்பையும் சார்ந்திருக்கும் தேவை எப்போதும் இருந்ததில்லை. கத்தார் நல்ல நோக்கத்துடன் நடுநிலையான மத்தியஸ்தராக தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் எதிரெதிர் தரப்புகளைப் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வருவதில் வியூக ரீதியான திறன்களும் கத்தாரிடம் நல்ல நிலையில் உள்ளது."

கத்தார் பல்வேறு வளங்களைக் கொண்டுள்ள நாடு என்றும், அதனால்தான் சிறிய நாடாக இருந்தாலும், மத்திய கிழக்கில் அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் டாக்டர் மிஸ்ரா கூறுகிறார்.

கத்தார் என்ற நாடு உருவானதிலிருந்தே, நான்காவது நவீன மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல், சௌதி அரேபியா, இரான் மற்றும் துருக்கி நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

வளைகுடாவிற்குள் சௌதி அரேபியாவின் சில எதிர்ப்புகளைத் தவிர, கத்தார் அனைத்து பிராந்திய சக்திகளுடனும் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, கத்தார் மோதல்களைத் தீர்ப்பதில் ஒரு திறமையான நாடாகவும் நடுநிலை மத்தியஸ்தராகவும் உருவெடுத்துள்ளது.

மேலும் பேசிய அவர், "கத்தார் ஒரே உலகளாவிய சக்தியான அமெரிக்காவுடன் வலுவான மற்றும் நம்பிக்கையான உறவுகளை கொண்டுள்ளது. கத்தார் அனைத்து இஸ்லாமியத் தரப்புகளிடமும் அவைகளின் அமைப்பு நோக்கங்களுக்கான மையமாக உள்ளது. இது கத்தாரை மத்திய கிழக்கு பகுதியில் தவிர்க்க முடியாத ஒரு நாடாக ஆக்குகிறது. மத்தியஸ்தம் செய்வது ஒரு மத கடமை என்றும் அந்நாடு நம்புகிறது," என்றார்.

"இந்த காரணிகள் அனைத்தும் கத்தாரை ஒரு வெற்றிகரமான மத்தியஸ்தராக ஆக்குகின்றன. அதே நேரம், கத்தாரின் பார்வையில், இப்படி மத்தியஸ்தம் செய்வது அந்நாட்டுக்கு உலக அளவில் ஒரு நற்பெயரையும், நம்பகத்தன்மையையும் பெற்றுத் தருகிறது."

"அதன் பிராந்திய அண்டை நாடுகளை விட அளவில் சிறிதாக இருந்தாலும், அந்நாடு தன்னை ஒரு தீவிர பிராந்திய சக்தியாகவும், மத்தியஸ்தராகவும் நிலைநிறுத்த இது உதவுகிறது."

அமெரிக்க பின்புலமும் பிற நாடுகளுடன் நல்லுறவும்...

ஜோர்டான் மற்றும் லிபியாவுக்கான இந்திய தூதராக அனில் திரிகுணாயத் பணியாற்றியுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மேற்கு ஆசியப் பிரிவிலும் அவர் பணியாற்றியுள்ளார்.

அவர் பேசியபோது, "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், கத்தாரில் அமெரிக்கா மிகப் பெரிய படை தளத்தைக் கொண்டுள்ளது. தனிநபர் வருமானத்தைப் பொறுத்தவரை, கத்தார் அந்தப் பிராந்தியத்தில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. கத்தாரின் தனிநபர் வருமானம் 1,38,000 டாலர்கள் என்பதுடன் அவர்களிடம் பெரிய எரிவாயு இருப்புக்கள் உள்ளன," என்றார்.

"கத்தார் நாட்டின் தலைவர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், சர்வதேச அளவில் சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்களாகவும் உள்ளனர். மேலும் ஒரு சிறிய நாடாக இருந்தும் அந்நாடு மத்திய கிழக்கில் அதிக செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை என்றும் அந்நாட்டினர் உணர்ந்துள்ளனர்."

தொடர்ந்து பேசிய அனில் திரிகுணயத், “கத்தாருக்கு பணப் பற்றாக்குறை இல்லை. எனவே பெரும் நெருக்கடிகளின் போது பெரும் வல்லரசுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவிற்கு உதவத் தொடங்கியதன் மூலம் அது தனது செல்வாக்கைக் கண்டறிந்தது.

தொடர்ந்து பேசிய அவர், "சில ஆண்டுகளுக்கு முன்பு, தாலிபன்களால் பிடிபட்ட ஒரு அமெரிக்க கைதிக்கு ஈடாக ஐந்து தாலிபன் கைதிகளை விடுவிக்க கத்தார் உதவியது. பின்னர் அவர்கள் கத்தாரில் அலுவலகம் திறக்க தாலிபன்களை அனுமதித்தனர்," என்றார்.

"கத்தாரின் உதவியுடன், அமெரிக்காவிற்கும் தாலிபனுக்கும் இடையில் தோஹா ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்ட போதெல்லாம், கத்தார் உதவியது. இதனால்தான் கத்தாருக்கு நேட்டோ அல்லாத நட்பு நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கியது."

மத்திய கிழக்கைப் பொறுத்த வரையில் கத்தார் ஆரம்பம் முதலே முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை ஆதரித்து வருவதாக அனில் திரிகுணாயத் கூறுகிறார்.

சௌதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் 2017ல் கத்தார் மீது தடைகளை அமல்படுத்தியதற்கு இதுவே காரணம் என்று அவர் கூறுகிறார்.

இந்த நான்கு நாடுகளும் 2017 இல் கத்தாருடன் இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்டன என்பதுடன் அதன் மீது கடல், தரை மற்றும் வான்வழி முற்றுகையை அறிவித்தன.

கத்தார் பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவும், இரானுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் பேசிய திரிகுணயத், "கத்தார் தனது சர்வதேச செல்வாக்கை அதிகரிக்க இந்த முற்றுகையின் போது கிடைத்த நேரத்தை எல்லாம் பயன்படுத்தியது வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்தியது. இப்போது அதன் விளைவுகள் நன்றாகத் தெரிகின்றன. கத்தார் மீது விதிக்கப்பட்ட தடைகளை அந்நாடு நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது," என்றார்.

"அதன் காரணமாக, கத்தார் உலகின் அனுதாபத்தைப் பெற்றது என்பதுடன் அந்நாட்டின் செல்வாக்கு அதிகரித்தது, மேலும் FIFA உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியை நடத்தியது போன்ற நிகழ்வுகளால், அந்நாட்டின் அந்தஸ்து தொடர்ந்து வளர்ந்தது. கத்தாருக்கு இப்போது இராஜதந்திர செல்வாக்கும் அதிகரித்துள்ளது."


ஐரோப்பாவில் நார்வே போல மத்திய கிழக்கில் கத்தார்

கத்தார் நாடு நார்வேயைப் போல மத்திய கிழக்கு பகுதியின் இருக்கும் இஸ்லாமிய குணாதிசயங்கள் கொண்ட நாடு என்கிறார் டாக்டர் மிஸ்ரா.

அவர் பேசியபோது, "மத்திய கிழக்கில் மோதல் சூழ்நிலைக்கு பெரும்பாலும் கத்தார் பொருளாதார ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் ஆதரவளித்த இஸ்லாமிய இயக்கங்கள் தான் காரணமாகும்," என்றார்.

"கூடுதலாக, கத்தார் ஒரு நம்பகமான அமெரிக்க நட்பு நாடாகும். மற்ற வளைகுடா முடியாட்சிகள் மற்றும் இஸ்ரேலை எதிர்க்கும் பல்வேறு விரோதக் கட்சிகளை எதிர்கொள்ள அமெரிக்காவிற்கு கத்தார் தேவை."

கத்தாரை பிராந்திய மேட்ச்மேக்கராக மாற்றுவதில் இரான் நாடு மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

கத்தார் இரானுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நாடாகவே இருக்கிறது. ஏனெனில் இரான் கத்தாரை துருக்கியைப் போல ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக எப்போதும் கருதியதில்லை. இதைத் தவிர, கத்தார் அப்பிராந்தியத்தில் வலுவான, பிரபலமான முஸ்லீம் சகோதரத்துவம் போன்ற இஸ்லாமிய இயக்கங்க்ளுடன் நெருக்கமாக உள்ளது.

இது குறித்து மிஸ்ரா கூறியபோது, "அமெரிக்காவுடனான உறவு என்பது கத்தாரின் சொந்த நோக்கத்துடன் அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதில் ஒரு ஆக்கபூர்வமான துணையாகவும் இருக்கிறது," என்றார்.

"மேலும், சர்வதேச அங்கீகாரத்துடன் கத்தார் தன்னை ஒரு வலுவான, வீரம் மிகுந்த நாடாக நிலைநிறுத்தவும் அந்த உறவு உதவுகிறது. தற்போதைய மத்தியஸ்தம் உலக அரசியலில் கத்தாரின் முக்கியத்துவத்தை வலுப்படுத்தியுள்ளது."



கத்தாரின் எமிர் தமீம் பின் ஹம்மாத் அல் தானி தொழுகையில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் கத்தார் நல்லுறவை வைத்திருக்கும் வரை அதன் செல்வாக்கு குறையாது என்று முன்னாள் தூதர் அனில் திரிகுணயத் கூறுகிறார்.

ஒரு காலத்தில் கத்தாருக்கு தடை விதித்த சௌதி அரேபியா, இன்று அதே கத்தாருடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மத்திய கிழக்கு நாடுகள் பல மௌனப் புரட்சிகளின் உச்சத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் பல மோதல்கள் உருவாகும் ஆபத்துள்ளதாகவும் டாக்டர் பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்.

இது குறித்து அவர் பேசியபோது, "மத்திய கிழக்கு பகுதி மேலும் பல அரபு எழுச்சிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். மேலும், பிராந்திய நடவடிக்கைகளில் இரானின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, கத்தாரின் நிலை வலுவடையும் வாய்ப்புகளே அதிகம்," என்றார்.

"பாலத்தீனப் பிரச்னை சரிசெய்யப்படாவிட்டால், மத்திய கிழக்கில் கடுமையான பிளவு ஏற்படும். அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகள் இரானுக்கு விரோதமாகவே இருக்கின்றன. மேலும் ஏமன், லிபியா, லெபனானில் இருந்து பாலத்தீனத்திற்கு பல சவால்கள் உள்ளன."

டாக்டர் மிஸ்ராவின் கூற்றுப்படி, "மத்திய கிழக்கில் அமைதிக்கான முயற்சிகள் பிராந்திய கட்டமைப்பின் வழியாக செல்கின்றன என்பதுடன் கத்தார் மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கும் இடத்தில் உள்ளது. இது ஒரு சிறிய தேசமாக இருந்தபோதிலும், மத்தியஸ்தர் என்ற வகையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது," என்று தெரியவருகிறது.

"உலகளாவிய நோக்கத்துடன் ஒரு பிராந்திய சக்தியாக, கௌரவம், மதிப்பு மற்றும் சட்டப்பூர்வமான செயல்திட்டத்துடன் கத்தாரின் நிலைப்பாடு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்." என்கிறார் அவர்.

Thanks: BBC tamil

Post a Comment

0 Comments