Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

குடும்பத்திற்கு செலவு செய்வதும் தர்மமே...!


ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்வதற்கு அடிப்படையான தேவை பொருளாதாரம் ஆகும். குடும்ப நிர்வாகம் என்று வரும்போது அவர்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடம் போன்ற அடிப்படையானவற்றை நிறைவேற்றிக் கொடுப்பதும், கல்வி மற்றும் மருத்துவம் போன்ற செலவினங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதும் குடும்பத்தலைவரின் தலையாயக் கடமையாக உள்ளது.

அவர் ஒழுங்காக உழைக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றினால், அல்லது உழைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்தால், அல்லது உழைத்து, குடும்பத்திற்காக செலவு செய்வதில் கருமித்தனம் செய்தால் அந்த குடும்பத்தை வழி நடத்துவது சிரமமாகி விடும்.

ஒரு குடும்பத்தலைவர் எவ்வாறு பொறுப்பாக தமது குடும்பத்தாருக்கு செலவு செய்யவேண்டும் என இஸ்லாம் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அவர் தம் குடும்பத்தாருக்கு செலவு செய்வதும் தர்மமே! நன்மையே! அறமே!

‘இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக அமையும் என நபி (ஸல்) கூறினார்கள்’.

(அறிவிப்பாளர்: அபூமஸ்ஊத் உக்பா பின்

அம்ர் (ரலி), நூல்: புகாரி)

ஊருக்கு வாரி வாரி வழங்கிவிட்டு, குடும்பத்தை அம்போ என்று விட்டுவிடக்கூடாது. ஊருக்கு வாரி வழங்கும் முன்பு தமது குடும்பத்தினருக்கு வழங்கிட வேண்டும். தர்மத்தை கூட முதலில் வீட்டிலிருந்து தான் தொடங்கிட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது.

‘உன் வீட்டாரிடமிருந்தே உன் தர்மத்தை தொடங்கு! என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

ஒரு நாளைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைத்து, குடும்பத்தாருக்கு செலவளிப்பது மட்டும் போதாது. ஓராண்டுக்குத் தேவையான உணவு பண்டங்களை சேமித்து வைப்பதும் கூடும். பஞ்ச காலங்களில் பதுக்கிவைப்பதும், விலையேற்றம் பெற பதுக்கிவைப்பது மட்டுமே இஸ்லாத்தின் பார்வையில் கூடாது.

‘நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்று, தம் குடும்பத்தாருக்கு அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை (முன்கூட்டியே) சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள்’.

(அறிவிப்பாளர்: உமர் (ரலி), நூல்: புகாரி)

ஒரு குடும்பத்தலைவர் குடும்பச் செலவுக்கு பணம் தராவிட்டால், அவருக்குத் தெரியாமல் ஒரு குடும்பத்தலைவி தனக்கும், தன் குழந்தைகளுக்கும் வேண்டியதை நியாயமான முறையில் எடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு உண்டு. அவளின் மீது குற்றமேதுமில்லை என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

ஒரு முறை ஹிந்த் பின்த் உத்பா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் “இறைத்தூதர் அவர்களே! என் கணவர் அபூசுய்யான் (ரலி) கருமியான மனிதர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உனக்கும், உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்’ என்று கூறினார்கள்.”

(அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

“வசதியுள்ளவர் தமது வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யாருக்குச் செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும்”. (திருக்குர்ஆன் 65:7)

‘உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறைஉவப்பை நாடி நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்கு உமக்கு நன்மை கிடைக்கும்; நீர் உம் மனைவியின் வாயில் ஊட்டுகிற ஒரு கவள உணவுக்கும் கூட நன்மையுண்டு’ என நபி (ஸல்) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்குத் தெரிவித்தார்கள்’. (நூல்: புகாரி)

இஸ்லாம் கூறும் குடும்பச் செலவினங்களின் அறிவுரை அனைத்து குடும்பத்தலைவருக்கும் பொருந்தும். குடும்பத்திற்கு செலவளிப்போம்! இறையருளைப் பெறுவோம்.

-பிந்த் இஸ்மாயீல்-

Post a Comment

0 Comments