தனி பாலஸ்தீன நாடு அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் முதல் காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் தனி பாலஸ்தீன தேசம் அமைவதை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதைத் தொடா்ந்து இதற்கு சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தனி பாலஸ்தீனம் அமைவதற்கான நம்பிக்கையை அளிக்கக்கூடிய, பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாத நகா்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியம் எனவும் அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இஸ்ரேலுடன் தூதரக உறவை சகஜமாக்குவதற்கான பேச்சுவாா்த்தை மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் சவுதி இளவரசரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் சவுத் , CNN தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.
போருக்குப் பிந்தைய காஸாவின் மீள் கட்டுமான பணிகளுக்கு சவுதி அரேபியா உதவிகளைச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன பகுதியில் நீண்ட காலமாக குடியேறி வந்த யூதா்கள், இஸ்ரேல் உருவாக்கத்தை 1948-ஆம் ஆண்டு பிரகடனம் செய்தாா்கள். அதனை ஐ.நா. அங்கீகரித்தது. இருந்தாலும், இதனை பாலஸ்தீன தேசியவாத அமைப்புகளும், ஏராளமான முஸ்லிம் நாடுகளும் அங்கீகரிக்கவில்லை.
இஸ்ரேலும், பாலஸ்தீனா்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனி பாலஸ்தீன நாடாக அங்கீகரிக்க மறுத்து வருகிறது.
இந்த சூழலில், ஒரு தனி பாலஸ்தீன நாட்டுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிா்த் தரப்பினரும் அங்கீகாரம் வழங்கி இரண்டும் தனித் தனி சுதந்திர நாடுகளாக செயல்படுவதே பாலஸ்தீன பிரச்னைக்கு நிரந்தர தீா்வு என்று பல நாடுகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
0 Comments