அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஷஃபான் மாதத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். ரஜப் மற்றும் ரமழான் மாதங்களுக்கு இடைப்பட்டதுவே ஷஃபான் மாதமாகும். இம்மாதத்தின் சிறப்பைப் பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
உஸாமதிப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானைப் போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை’ என்று கூறிய போது, நபியவர்கள், மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் (ஷஃபான்) விடயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அம்மாதத்தில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் அமல்கள் உயர்த்தப்படுகின்றன. எனது அமல்கள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள். (ஆதாரம்- சுனனுந்-அந்நஸயி).
ஷஃபானுக்கு அடுத்து வரும் மாதம் ரமழான் மாதமாகும். இதில் எமது முன்னோர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று எங்கள் மீதும் அல்லாஹுதஆலா கடமையாக்கியுள்ளான். இருப்பினும் மார்க்கம் அனுமதித்த காரணங்களுக்காக சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான்.
சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் நோற்றுக் கொள்ளுமாறு அல்லது அதற்குப் பகரமாக ஃபித்யாக் கொடுக்குமாறும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.
இந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடியவர்கள் எத்தகையவர்கள் என்பதையும் அவர்களுக்கான மார்க்க வழிகாட்டல்கள் யாது என்பதையும் அறிந்து செயற்படுவது இன்றியமையாததாகும்.
அந்த வகையில், முதலாம் வகையினர், நோன்பு நோற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு கடுமையான நோய் வாய்ப்பட்டவர் ஆவார். மாதவிடாய், பிரசவம், (தொழுகையைச் சேர்த்து, சுருக்கித் தொழுவதற்கு முடியுமான தூர அளவு கொண்ட) பிரயாணம் போன்ற காரணங்களுக்காக நோன்பை விட்டவர்கள் போன்றோர் விடுபட்ட தங்கள் நோன்பை அடுத்துவரும் ரமழான் மாதத்திற்கு முன்னர் நோற்று கழாச் செய்து கொள்ள வேண்டும். அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்வதற்கு சக்தியிருந்தும் கழா செய்யவில்லையெனில், அந்நோன்பைக் கழா செய்வதுடன், ஒரு வருடம் பிற்படுத்தியதற்காக பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் ஃபித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு நோன்பைக் கழா செய்யாமல் வருடங்கள் கடந்து செல்லும் போது ஒரு வருடத்திற்கு ஒரு ஃபித்யா என்ற வகையில் ஃபித்யாவும் இரட்டிப்பாகும்.
இரண்டாம் வகையினரில் கர்ப்பிணித் தாய்மார்களும் பாலூட்டும் தாய்மார்களும் அடங்குவர். இவர்கள் தனக்கு மாத்திரம் அல்லது தனக்கும் தனது குழந்தைக்கும் ஏதும் ஆபத்துக்கள் ஏற்படும் என்று பயந்து நோற்காமல் விட்ட நோன்புகளை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் கழா மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் ஃபித்யா கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் நோன்பை நோற்றுக் கொள்வதற்கு சக்தியிருந்தும் கழா செய்யவில்லையெனில், அந்நோன்பைக் கழா செய்வதுடன், ஒரு வருடம் பிற்படுத்தியதற்காக பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் ஃபித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு நோன்பை கழா செய்யாமல் வருடங்கள் கடந்து செல்லும் போது ஒரு வருடத்திற்கு ஒரு ஃபித்யா என்ற வகையில் ஃபித்யாவும் இரட்டிப்பாகும்.
அவ்வாறே கர்ப்பிணித் தாய்மார்கள் நோன்பு நோற்றால் கருச்சிதைவு போன்ற விளைவுகள் ஏற்படும் எனவும் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்றால் தனது குழந்தைக்கு பாலில் குறைபாடு போன்ற விளைவுகள் ஏற்படும் எனவும் பயந்து நோன்பை விட்டால் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் கழாச் செய்வதுடன் தான் உட்கொள்ளும் பிரதான உணவான அரிசியிலிருந்து 600 கிராம் ஃபித்யாவாக ஏழைக்குக் கொடுத்தல் வேண்டும்.
மூன்றாம் வகையினர், நோன்பை நோற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நிரந்தர நோய் மற்றும் வயோதிபம் போன்ற காரணங்களுக்காக நோன்பை விட்டவர்களாவர்.
இவர்கள் ஒவ்வொரு நோன்புக்கும் பகரமாக உட்கொள்ளும் பிரதான உணவான அரசிலிருந்து 600 கிராம் பித்யாவாக ஏழைக்கு உணவளிக்க வேண்டும். இவர்கள் பித்யாவை பிற்படுத்தியதற்காக மேலதிகமாக பித்யாக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் அந்நோன்பை கழா செய்வதும் அவர்கள் மீது அவசியமில்லை.
எனவே, அடுத்து வரும் ரமழான் மாதத்தில் நற்காரியங்களில் அதிகமதிகம் ஈடுபடுவதற்கு முன்கூட்டியே நாம் தயாராக வேண்டும். இம்மாதத்தில் நபியவர்களைப் போன்று அதிகமதிகம் நோன்புகளை நோற்று பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும்போது ரமழான் மாதத்தில் நற்காரியங்களை அதிகமாகச் செய்வது மிக எளிதாகி விடுகிறது.
சென்ற ரமழானில் விடுபட்ட நோன்புகளை ஆண்களும், பெண்களும் கழாச் செய்துகொள்ள இம்மாதத்தைப் பயன்படுத்திக் கொள்வோம். வல்ல நாயன் அல்லாஹ் எம்மனைவருக்கும் தௌபீக் செய்யட்டும்.
எ.எச்.எம்.மின்ஹாஜ் முப்தி…
(காஷிபி, மளாஹிரி), நிந்தவூர்
0 Comments