Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ரமழானுக்காக ஷஃபானிலே தயாராவோம்...!


அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறியபோது, நபியவர்கள், ‘இது ரஜப் மற்றும் ரமழான் மாதத்துக்கு இடைப்பட்ட மனிதர்கள் அசிரத்தையாக இருக்கின்ற ஒரு மாதமாகும். 

ஆனால் அகிலத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வுக்கு மனிதர்களின் செயல்பாடுகள் (அமல்கள்) சமர்ப்பிக்கப்படுகின்ற மாதமிது. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் எனது செயல்பாடுகள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஆசிக்கிறேன்’ என்றார்கள்.

(ஆதாரம்: அபூதாவூத், நஸாஈ, இப்னு ஹுஸைமா)

ரஜப் மாதம் என்பது சங்கையான நான்கு மாதங்களில் ஒன்று என்ற வகையில் மனிதர்கள் அம்மாதத்தில் அதிகமான நன்மைகளை செய்யவும் பாவங்களிலிருந்து தவிர்ந்துகொள்ளவும் முயற்சி செய்வார்கள். ரமழானின் மகத்துவம் காரணமாகவும் நன்மையான காரியங்களை முன்னெடுப்பதற்கான தடைகள் குறைவாக இருப்பதனாலும் ரமழானில் அதிக நன்மைகளை செய்வார்கள். ஆனால் ஷஃபானில் கவனயீனமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே நபியவர்கள் இப்படி கூறினார்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியும்.

செயல்பாடுகள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படல் என்பது நான்கு வடிவங்களில் அமைய முடியும் என்று இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நாளாந்தம், வாராந்தம், வருடாந்தம், மரணத்தின் பின்னர் இறுதியாக அல்லாஹ்விடம் உயர்த்தப்படுகிறது. நாளாந்த செயற்பாடுகள் பகலின் இறுதிப்பகுதியிலும் இருளின் கடைசி நேரத்திலும் உயர்த்தப்படுகிறது. வாராந்த செயற்பாடுகள் திங்கள், வியாழன் தினங்களிலும் வருடாந்த செயற்பாடுகள் ஷஃபான் மாதத்திலும் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்டுகிறது. கடைசியாக ஒருவன் மரணமடைந்த பின்னர் முழுமையாக அல்லாஹ்விடம் ஒப்புவிக்கப்படுகிறது. எனவே இத்தகைய சந்தர்ப்பங்களை நாம் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திங்கள், வியாழன் தினங்களில் நோன்பு நோற்பதற்கான காரணம் குறித்து நபிகளாரிடம் கேட்கப்பட்டபோது ‘அவ்விரு தினங்களிலும் செயல்பாடுகள் ஒப்புவிக்கப்படுகின்றன. நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு எனது அமல்கள் காட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்கள்.

(ஆதாரம்: ஸுனன் திர்மிதி)

நபியவர்கள் ஷஃபானில் அதிகமாக நோன்பு நோற்றார்கள். திங்கள் வியாழன் தினங்களில் நோன்பிருந்தார்கள். காலை மாலை திக்ருகளை ஓதினார்கள். அஸர், ஸுபஹ் தொழுகைகளை ஊக்குவித்தார்கள். மலக்குகள் அதிகமாக உலகில் சஞ்சரிக்கும் சந்தர்ப்பமாக இந்நேரங்களை கருத முடியும். இந்த மலக்குகள்தான் மனிதர்களின் பதிவுகளை சமர்ப்பிக்கவுள்ளார்கள்.

இரவு நேர மலக்குகளும் பகல் நேர மலக்குகளும் உங்களை பின்தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். ஸுபஹ், அஸர் நேர தொழுகைகளில் உங்களோடு அவர்கள் இணைந்து கொள்வார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ்வை நோக்கி சென்றுவிடுவார்கள். எனது அடியார்கள் எப்படி இருந்தார்கள் என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு மலக்குகள் நாம் அவர்களை விட்டு வரும்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்களை நாம் அடைந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள் என்பார்களெனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இத்தகைய சிறப்புகள் ஷஃபான் மாதத்துக்கு காணப்பட்டமையால் நபியவர்கள் நல்லரங்களை இம்மாதத்தில் அதிகமாக செய்துள்ளார்கள். ‘ரமழான் மாதம் தவிர்த்து வேறு எந்த மாதத்திலும் நபியவர்கள் முழுமையாக நோன்பு நோற்கவில்லை. ஷஃபான் மாதத்தில்தான் நபியவர்கள் மிக அதிகமாக நோன்பு நோற்றார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

இவ்வகையில் நாமும் இம்மாதத்தை சிறப்பாகப் பயன்படுத்தி நன்மைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள முனைய வேண்டும். அல்லாஹ்வுடன் தொடர்பான விடயங்களுடன் மாத்திரம் சுருங்காது மனிதனுக்கு பயனுள்ள காரியங்களிலும் நாம் ஈடுபாடு காட்ட வேண்டும். செயல்படும்போது மனத்தூய்மை என்பது மிக முக்கியமானதாகும். இஃலாஸ் அற்ற செயல்பாடுகள் பயனற்றவையாக மாறிவிடும். உலக விடயமாக கருதப்படும் விடயங்களைகூட நன்மை தரக்கூடிய விடயமாக இஃலாஸ் மூலம் மாற்றியமைக்க முடியும். சண்டை, சச்சரவுகள், முரண்பாடுகள், பிளவுகளை களைந்து ஒற்றுமை, ஐக்கியம், மனிதம் மிகைக்கும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் அதிகமாக கையேந்தி பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் பாவங்களுக்கான மன்னிப்பையும் கோரவும் தவறக்கூடாது.

மேலும் ரமழானை வரவேற்கும் மரபு நீண்ட காலமாக முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. ரமழானின் வருகை பற்றி அதிகம் பேசிக்கொள்வார்கள். ரமழானின் சிறப்புகளையும் அது தொடர்பான சட்டதிட்டங்களையும் அறிந்துகொள்வதுதான் நோன்பை வரவேற்பதற்கான சிறந்த வழியாகும்.

அல்குர்ஆன் ஹஜ் தொடர்பாக கூறும்போது ‘பிரயாணத்துக்கான கட்டுசாதத்தை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தயார்படுத்துகின்ற மிக சிறந்த பயண ஏற்பாடு தக்வா என்ற இறையச்சமாகும்’ (பகரா 197) என்று குறிப்பிடுகிறது. இது போன்றே ரமழானின் நோக்கமான இறையச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளும் விதமாக ரமழானை வரவேற்பதே சாலச்சிறந்தது.

இவ்வகையில்தான் நபி(ஸல்) அவர்களும் தனது தோழர்களை ஷஃபானின் இறுதிப்பகுதியில் திரட்டி ரமழானின் சிறப்புகளை நினைவுபடுத்தி அதனை பயன்படுத்திக்கொள்வதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘இதோ ரமழான் வந்துவிட்டது. இது அருள் நிறைந்த மாதமாகும். இம்மாதத்தில் நோன்பு நோற்பது உங்களுக்கு கடமையாக்கப்படடுள்ளது. இம்மாதத்தில் சுவனவாயில்கள் திறக்கப்படும். நரக வாயில்கள் மூடப்படும். அட்டூழியம் புரியக்கூடிய ஷைத்தான்கள் விலங்கிடப்படும். இதிலே ஆயிரம் மாதங்களைவிட சிறப்பான ஒரு இரவு உண்டு. யார் அதன் சிறப்புகளை அடையத் தவறி விடுகிறாரோ அவர்தான் தவறவிட்டவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஆதாரம்: நஸாஇ, ஸஹீஹுல் ஜாமிஃ அல்பானி)

மேலும் ரமழானை பயன்படுத்தும் நோக்கில் ஷஃபானிலிருந்து நபி(ஸல்) அவர்கள் தயாராகியுள்ளார்கள். நாமும் அவ்வாறே ரமழானை பயன்படுத்த எம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக திட்டமிட்டுக் கொள்வது அவசியம். குறிப்பாக தனிப்பட்ட முறையில் அல்குர்ஆனுடன் தொடர்பினை ஏற்படுத்தல், தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுதல், ஸுன்னத்தான வணக்கங்களில் ஈடுபடுதல் போன்றவற்றுடன் குடும்பமாக மனைவி பிள்ளைகளுடன் இணைந்தும் இவற்றை பேணிக்கொள்ளலாம். ஸஹர் உணவுக்காக எழும்பியது முதல் மீண்டும் தூங்க செல்வது வரையான நாளாந்த வாழ்வை திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ரமழானில், அல்குர்ஆன் அருளப்பட்டது என்றவகையில்தான் நோன்புக்கு இத்தகைய சிறப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் நோன்பில் அல்குர்ஆனுடனான தொடர்பை மேம்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும். அல்குர்ஆனை இராகமாக ஓதி அதில் லயித்துப்போவதும் அதனை மனனமிடுவதுடன் அதன் கருத்துகளை உணர்ந்து பின்பற்றுவதும் அல்குர்ஆனுக்கு நாம் நிறைவேற்றவேண்டிய கடமைகளாகும். எனவே ரமழானுக்காக ஷஃபானிலே தயாராவோம்.

அஷ் ஷெய்க் யூ.கே றமீஸ்…
எம்.ஏ. (சமூகவியல்)

Post a Comment

0 Comments