பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இதற்கு தயாராக இல்லை. காசாவில் ஹமாஸ் படையை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று அவர் கொக்கரித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டு மக்களே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் ஐநா சபையில் போர் நிறுத்தம் குறித்து சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்தை கொண்டுவரும் போதெல்லாம் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்துவிடும். மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு தற்போதுவரை அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது.
இதனால் சுமார் 30,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணைகளும், பீரங்கி குண்டுகளும் தாக்கி பலர் கொல்லப்பட்டாலும், போர் ஏற்படுத்தியுள்ள பசி, பட்டினியாலும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சர்வதேச நாடுகள் அனுப்பிய உணவு, மருந்து பொருட்கள் எகிப்தின் ராஃபா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், போரில் பட்டினியை இஸ்ரேல் ஆயுதமாக பயன்படுத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.
ஐ.நா மனித உரிமை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜெரமி இந்த குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.
முன்னதாக எகிப்து, ஜோர்டான் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த ‘Refugees International’ குழு காசாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் குறித்து ஆய்வு செய்திருந்தது.
இந்த ஆய்வின் அறிக்கை இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது.
அதில், காசாவில் செயற்கையான பஞ்சம் ஏற்படுத்தப்படுவது உண்மை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காசாவுக்குள் உதவி பொருட்கள் செல்வதை இஸ்ரேல் பகிரங்கமாக தடுத்து வருகிறது. கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் போரில், காசா மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுத்தமான குடிநீர், மருந்து பொருட்கள் ஆகியவை கிடைப்பது சிரமமாகியுள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கிட இஸ்ரேல் குறுக்கே நிற்கக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை இஸ்ரேல் வெளிப்படையாக கடைப்பிடிக்க மறுத்துவிட்டது. உணவு மருந்துகளை ஏற்றி வரும் வாகனங்கள் நாட்கணக்கில் எல்லையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. எனவே உணவுகள் வீணாக்கப்படுகின்றன. எனவே, உணவு கொண்டு வரும் டிரக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments