ஜனாஸா எரிப்புக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புத்தளம் வருகையை கண்டித்து புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
புத்தளம் – பாலாவி ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக ஜூம்ஆ தொழுகையை அடுத்து வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, “துரோகிகளே புத்தளம் வராதே”, “துரோகிகளே புத்தளம் எமது புனித பூமி அதனை கலங்கப்படுத்தாதே”, “ஜனாஸா எரிப்புக்களுக்கு ஆதரவு வழங்கிய துரோகிகளே எமது மண்ணை மிதிக்காதே” இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும் , சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் துணை போனவர்கள், முஸ்லிம் ஜனாஸாக்களை எரித்த போது அதற்கு ஆதரவு வழங்கி, மௌனம் காத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் புத்தளம் மண்ணை கலங்கப்படுத்துவதற்காக இங்கு வரக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக காட்டிக் கொடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று ரணில் ராஜபக்ஷ அரசுக்கு சோரம் போயுள்ளதாக இங்கு கருத்து தெரிவித்த வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
புத்தளம் என்பது புனித பூமியாகும். இங்கு வாழும் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே, உங்கள் வருகையால் இந்த மக்களின் ஒற்றுமை சீர்குலையும் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
வங்கிக் கணக்குகளில் பணம் வந்து குவிய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்த அந்தக் கறை படிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் புத்தளத்திற்கு வந்து இங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம் என்ற செய்தியை புத்தளம் சமூகம் சார்பாக எத்திவைக்க விரும்புகிறோம் என்றார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து சிறுபான்மை அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று இன்று (30) புத்தளம் நகரில் இடம்பெறவுள்ளது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் அமைச்சர்களான அலிசப்ரி, அலிசாஹிர் மௌலானா, இராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹ்மட், பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், ஏ.எல்.எம்.அதாவுல்லா,எஸ்.எம்.எம்.முஷாரப், எம். வேலுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments