
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது நாவாகும்.
அதிலும் தான் கற்பனை செய்கின்ற சிந்திக்கின்ற விடயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிகமிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகிறது. இந்த நாவு ஒருமனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம் உள்ளவனாகவும் நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகிறது. இதேபோன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கத்தில் பலவீனமானவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகிறது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில், மற்றவர்களை பற்றியும் பேசுவதென்பது சமூகத்துக்கு மத்தியில் மலிந்து கிடக்கின்றன.
‘புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது,’ அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘என்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவதுதான் புறம் என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா’? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப்பற்றி இட்டுக் கட்டுகிறாய் என்றார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)
புறம் பேசுவது பெரும் பாவங்களில் ஒன்றாகும். ஒரு மனிதன் வெறுக்கக்கூடிய எதனைப்பற்றி குறிப்பிட்டாலும் அதுபுறம் பேசுவதே ஆகும். ஒருவனைப் பற்றி அவன் அவ்விடத்தில் இல்லாமல் இருக்கும் போது அவனைப் பற்றி கூறுவதும் இதில் அடங்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ‘நீ கூறுவது அவனில் இருந்தால் அது புறம் பேசுவதாகும். ‘புறம் பேசுவது இவ்வுலகில் தீய காரியங்களுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றதோ அதேபோன்று மறுமையில் நாம் பல நன்மைகள் செய்திருந்தாலும் ஒரு நன்மை கூட பயனளிக்காத நஷ்டவாளிகளாக மாறிவிட நேரிடும். மறுமையில் நஷ்டவாளிகள் யார் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடத்தில் ‘உங்களில் நஷ்டவாளி யார்? என்று தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் எங்களில் எவர்களிடத்தில் தீனாரும் உலகத்தில் வாழ்வதற்கு வசதி வாய்ப்பும் இல்லையோ அவர்களே நஷ்டவாளிகள் என குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், மறுமை நாளில் ஒரு மனிதன் தொழுகை, நோன்பு, ஸகாத் போன்ற நல்ல கருமங்களுடன் வருவான். ஆனால் பலர் வந்து இவன் என்னை ஏசியவன். நான் செய்யாத விசயத்தை என் மீது சுமத்தியவன். என் செல்வத்தை சாப்பிட்டவன், இரத்தங்களை ஓட்டியவன் என்றெல்லாம் அவனுக்கு எதிராக மனிதர்கள் முறையீடு செய்வார்கள். அப்போது அவன் இவ்வுலகில் செய்த நல்லமல்களை எடுத்து அவர்களுக்கு கொடுக்கப்படும். நல்லமல்கள் முடிந்தபிறகு அவர்களின் தீமைகளில் இருந்து எடுக்கப்பட்டு அம்மனிதனுக்கு வழங்கப்படும். இவ்வாறு இவன் நரகத்திற்கு நுழைவிக்கப்படுவான்.
(ஆதாரம்: ஸஹீஹ இப்னு ஹிப்பான்)
இந்த நபிமொழி மறுமையில் புறம் பேசியவனுக்கு ஏற்படும் விளைவை தெளிவாக கூறுகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான், முஃமின்களே! சந்தேகமான பல எண்ணங்களில் இருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். பிறர் குறைகளை நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது உம்முடைய இறந்த சகோதரின் மாமிசத்தை புசிக்க விரும்புவீர்களா? இல்லை நீங்கள் இதனை வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபைசெய்பவன். (அல்குர்ஆன் 49:12)
நமக்குத் தெரியாத விஷயங்களை விட்டும் அத்தகைய செய்திகளை வதந்திகளாகப் பரப்புவதை விட்டும் நாம் முற்றாக தவிர்ந்து கொள்ளவேண்டும். இவர் சொன்னார், அவர் சொன்னார் என்ற வார்த்தைகளை முற்றாகவே தவிர்க்க வேண்டும். சிலவேளைகளில் இவ்வாறான வார்த்தைகளை அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹமத்து (ஸல்) அவர்கள் மீதும் பொய் உரைப்பதற்குக் கூட இட்டுச் செல்லும். இதனால் எவ்வித ஆதாரமும் இல்லாத விஷயத்தைக் கூட ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது தவறு இருக்கின்றதா? அல்லது பிறரை துன்புறுத்தும் வகையில் நமது பேச்சுக்கள் அமைந்திருக்கின்றதா? என்று கவனமுடன் பார்க்க வேண்டும். நாம் பேசக் கூடிய அனைத்து விஷயங்களுமே பதிவு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
(ஆல்குர்ஆன் 50:18) என்பதை நாம் ஒருகணமும் மறந்து விடக்கூடாது.
நாம் பேசுகின்ற விஷயம் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் பதியப்படுகின்றது என்பதை இவ்வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. அதனால் நியாயத் தீர்ப்பு நாளில் இவைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்குத் தக்கவாறு தகுந்த கூலி கொடுக்கப்படும்.
இதனால் நாம் மிகுந்தகவனமுடன் நடந்து கொண்டு நமது நாவைப் பேணி மறுமையில் நஷ்டவாளியாவதை தவிர்ந்து கொள்ளவேண்டும்.
நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் பிரயோசனமுள்ளதாக இருக்க வேண்டும். பேசுவதாக இருந்தால் நல்லதையே பேசட்டும். இல்லாவிடின் வாய்மூடி மௌனமாக இருக்கட்டும் என்பது நபி மொழி. பிறரை புறம் பேசி அவர்களது மனதை புண்படுத்தும் வார்த்தையாக இல்லாமல் இருக்க வேண்டும். முடிந்தவரைக்கும் நல்லவைகளையே பேச முயற்சிப்போமாக.
-மௌலவி எம்.யூ.எம். வாலிஹ்-
(அல் அஸ்ஹரி,)
வெலிகம
0 Comments