
ஏறாவூரில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லிம்களை நினைவுகூரும் வகையில், மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் நேற்று (12) மூடப்பட்டிருந்தன.
ஏறாவூரில் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 35 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று மத அனுஷ்டானங்களும் நடத்தப்பட்டன.
இதன்போது, ஏறாவூர் பிரதான வீதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டதுடன், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவு நிகழ்வு, ஏறாவூர் சுஹதாக் சங்கத்தின் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில், நூருஸ்-சலாம் மத்திய கல்லறை மசூதியில் நடைபெற்றது.
இதன்போது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மத அறிஞர்கள், மாணவர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏறாவூர் நகர சபை மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இணைந்து அரசாங்கத்திற்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட மனு, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மிலிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments