
முஸ்லிம் சமூகத்தின் முன்னோடித் தலைவர்கள் பின்னால் வருகின்ற சமூகத் தலைவர்களுக்கான முன்மாதிரிகளை விட்டுச் சென்றிருப்பது முஸ்லிம் சமூகம் எல்லாக் காலங்களிலும் சிறந்து விளங்குவதற்கான அடையாளகும்.
அபூபக்கர் (ரழி) அவர்கள் கலீபாவாக இருந்த போது ஸூப்ஹூத் தொழுகைக்குப் பின்னர் ஒரு மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைவதை உமர் (ரழி) அவர்கள் அவதானித்து வந்தார்கள். பின்தொடர்ந்து சென்று பார்த்த போது தனியாக வாழும் அந்த மூதாட்டிக்கான பணிவிடைகளை அவர் செய்து விட்டு வருவதை அறிந்து கொண்டார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்களை அடுத்து உமர் (ரழி) கலீபாவான போது அவர்கள் இந்தப் பணியைத் தொடர்வதற்காக அந்த மூதாட்டியின் வீடு சென்ற போது அந்தக் கண் தெரியாத மூதாட்டி இன்று அவர் அபூபக்கர் (ரழி) வரவில்லையா எனக் கேட்டபோது எப்படித் தெரிந்து கொண்டீர்கள் எனக் கலீபா உமர் (ரழி) அவர்கள் வினவுகிறார்கள்.
அதற்கு அந்த மூதாட்டி அவர் உணவை இலேசாக மென்று உண்ணக்கூடிய வகையில் எனக்கு ஊட்டிவிடுவார் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரழி) அவர்கள், அபூபக்கரே (ரழி), நீங்கள் பின்னால் வருகின்றவர்களை கஷ்டத்தில் போட்டு விட்டீர்களே என்று கூறினார்கள்.
முஸ்லிம்களின் தலைவர்கள் இப்படித்தான் பண்பாடுகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்கும் முன்மாதிரிகளாக விளங்கினார்கள். முழு உலகுக்குமே தலைவர்களாக மாறிய போதும் கூட அவர்களிடம் காணப்பட்ட எளிமையான பண்புகளும் பண்பாடுகளும் மாறவில்லை.
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் றஸூல் (ஸல்) அவர்களை சந்திக்கச் செல்கிறார்கள். அப்போது நபியவர்கள் ஒரு பாயில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரது உடம்பின் மேற்பகுதியில் எந்தப் போர்வையும் இல்லை. இதனால் அவரது முதுகில் பாயின் தடயங்கள் பதிந்திருந்தன. அவரது வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடியளவு கோதுமை விதைகளும் கடுமையான மேல் தோலைக் கொண்ட சில தானிய வகைகளும் காணப்பட்டன. அவரது தலைக்கு மேலால் ஆட்டுத் தோல் தொங்கிக் கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த உமர் (ரழி) அவர்களுக்கு அழுகை வந்துவிட்டது. அதனைப் பார்த்த நபியவர்கள் கத்தாபின் மகனே ஏன் அழுகிறீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! எப்படி நான் அழாதிருக்க முடியும்? இதோ இந்தப் பாயின் அடையாளம் உங்கள் முதுகில் பதிந்துள்ளன. உங்களிடம் இருக்கின்ற சொத்துக்கள் இதோ நான் பார்த்துக் கொண்டிருப்பவை மாத்திரம் தான். அங்கே கிஸ்ராவும் கைஸரும் அழகிய கனி தரும் மரங்களுக்கும் ஆறுகளுக்கும் மத்தியில் வாழ்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதராகவும் அவனின் சிறந்த படைப்பாகவும் இருக்கிறீர்கள்? உங்களுக்கேன் இந்நிலை எனக் கேட்டார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள்: கத்தாபின் மகனே, எனக்கு மறுமையும் அவர்களுக்கு உலகமும் கொடுக்கப்படுவதை நீ விரும்பவில்லையா? எனக் கேட்டார்கள்.
இதுதான் முஸ்லிம்களின் தலைவரின் வாழ்க்கை. இல்லை, உமர் (ரழி) அவர்கள் சொன்னது போன்று படைப்புக்களிலேயே சிறந்த மனிதனது வாழ்க்கை. அவர் தொடர்ந்தேர்ச்சையாக மூன்று நாட்களுக்கு வயிறார உண்டதில்லை. அவர் தனது வாழ்நாளில் ஒரு நாளேனும் இரு நேரங்கள் முழுமையாக வயிறார உணவு உண்டது கிடையாது.
ஆயிஷா (ரழி) அவர்கள் உர்வா (ரழி) என்ற ஸஹாபியைப் பார்த்து சொல்கிறார்கள்: எனது சகோதரியின் மகனே, அல்லாஹ்வின் மீது ஆணையாக நாம் ஒரு பிறை முடிந்து இவ்னொரு பிறை கண்டு அதன் பின் இன்னொரு பிறை என மூன்று பிறைகளைக் கண்டு விட்ட நிலையிலும் ரஸூல் (ஸல்) அவர்களின் வீடுகளில் ஒன்றிலேனும் அடுப்பில் நெருப்பேற்றப்படவில்லை என்கிறார்கள்.
அப்படியாயின் சாச்சி நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று உர்வா (ரழி) கேட்கிறார்கள். ஆயிஷா (ரழி) சொல்கிறார்கள், இரண்டு கருப்புக்கள் காணப்பட்டன. அதாவது, காய்ந்த ஈச்சம் பழம் உண்டு நீரைக் குடித்து வாழ்ந்தோம். சிலபோது எமது அயல் வீடுகளிலிருந்து நபியவர்களுக்கு பால் கொண்டு வரப்படும். அதனை நாம் அவருக்குக் குடிக்கக் கொடுப்போம். அவ்வளவுதான்.
ஒருநாள் உச்சி வெயில் சுட்டெரிக்க ரஸூல் (ஸல்) அவர்கள் பாதையில் இறங்கி பள்ளிவாசலை நோக்கி செல்கிறார்கள். அங்கு அபூபக்கரும், உமரும் (ரழி) அவருக்கு முன்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பார்த்து கேட்கிறார்கள்: இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் ஏன் வீட்டை விட்டு வெளியே இறங்கி வருகிறீர்கள்? இருவரும் சொல்கிறார்கள்: பசியினால் தான் யா றஸூலல்லாஹ். ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்: எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக நீங்கள் இருவரும் இந்த நேரத்தில் ஏன் வந்தீர்களோ அதே காரணத்தினால் தான் நானும் வீட்டிலிருந்து வெளியே வந்தேன் என்கிறார்கள்.
இறை தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்து அழுத உமர் (ரழி) பற்றி அனஸ் (ரழி) இப்படிச் சொல்கிறார்கள். உமர் (ரழி) அமீருல் முஃமினாக இருக்கும்போது நான் அவரைப் பார்த்தேன். அவர் உடுத்திருந்த ஆடையில் இரு தோல் புயங்களுக்கு இடையே மூன்று ஓட்டைகள் சேர்த்துச் சேர்த்து தைக்கப்பட்டிருந்தன.
உமரின் (றழி) அன்புக்குரிய தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போதும் இப்படியான ஆடையைத்தான் அணிந்திருந்தார்கள். அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒரு முறை ஆயிஷா (ரழி) அவர்கள் எங்களுக்கு கிழிசல்கள் சேர்த்துச் சேர்த்து ஒட்டுப் போட்டிருந்த ஒரு மேல் சட்டையையும் கடினமான தோலினாலான ஒரு கீழாடையையும் கொண்டு வந்து காட்டிவிட்டு. றஸூல் (ஸல்) அவர்கள் மரணிக்கும்போது கடைசியாக இவை இரண்டையும்தான் அணிந்திருந்தார்கள் என்று சொன்னார்கள்.
உலகையே தங்களது கால்களுக்குக் கீழால் பணிய வைத்த இந்த தலைவர்களின் பரம்பரையில் ஒருவர் தான் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள். அவர் இஸ்லாத்தை ஏற்கும் முன்னர் மக்காவிலேயே மிகவும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த ஒரு இளைஞர். அவர் மிகவும் புதிய ஆடைகளையே அணிவார். மிகவும் புதிய நறுமணங்களையே பூசிக் கொள்வார். மிகவும் புதிய பாதணிகளையே அணிந்திருப்பார். அவர் தூங்கி எழும்பும்போது உண்பதற்காக அவரது படுக்கையின் தலைமாட்டில் பல வகையான பழங்களும் பாலும் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், அவர் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் பலபோது மாற்று உடை அணிய உடை இன்றி வாழ்ந்தார்.
இறுதியில் உஹதுக் களத்தில் ஷஹாதத்தைத் தழுவிக் கொண்டார்.
அவர் ஷஹீதாக்கப்பட்டபோது அவரது நிலைபற்றி ஹப்பாப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். அவர் ஷஹீதாக்கப்படும் போது ஒரு சிறிய போர்வை மாத்திரமே அவருக்கு சொந்தமாயிருந்தது. அதனால் அவரது தலையை மூடினால் பாதங்கள் வெளியே தெரிந்தன. காலை மூடினால் தலை வெளியே தெரிந்தது. அந்தப் போர்வையால் அவரது தலையை மூடுங்கள்.
அவரது இரு பாதங்களையும் இலைகளைக் கொண்டு மூடி விடுங்கள் என நபியவர்கள் சொன்னார்கள்.
இப்படித்தான் முஸ்லிம்களின் முன்னோடிகள் வாழ்ந்து காட்டினார்கள். மக்கள் சுகமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது சுகபோகங்களைத் துறந்தார்கள். இதனால் மக்கள் மத்தியில் அவர்கள் எளிமையாக வாழ்ந்தாலும் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்துக்கு உரியவர்களானார்கள். முஸ்லிம் சமூகம் தனது இறுதிக் காலம் வரையில் இந்தப் பண்புகளை ஏற்றிருக்கும் வரை அவர்கள் பூமியில் சிறந்தவர்களாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.
-பியாஸ் முஹம்மத்-

.png)

0 Comments