Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கட்டம் கட்டமாக விதியாக்கப்பட்ட ரமழான் நோன்பு...!



சட்டமியற்றலில் படிப்படியான நடைமுறை (Gradualism) என்பது உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட ஒரு முறையாகும். 

இஸ்லாம் அதை தொழுகை, நோன்பு உள்ளிட்ட பல சட்டங்களில் பிரயோகித்துள்ளது. அதேபோல் இஸ்லாத்தில் தடைவிதிப்புகளும் படிப்படியாகவே அறிமுகப்படுத்தப்பட்டன. மதுபானம், வட்டி போன்றவை தடைசெய்யப்படல், விபசாரத்திற்கான தண்டனை முதலியவையும் கட்டங்கட்டமாகவே அமுல்படுத்தப்பட்டன.

இதன் பின்னுள்ள நோக்கம் மக்களுக்கு எளிதை அளிப்பதும், அனைத்து கட்டளைகளையும் ஒரே நேரத்தில் சுமையாக ஏற்றாமல் இருப்பதுமாகும். இல்லையெனில், அவர்கள் கடமைகளை விட்டுவிடக்கூடும்.

தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ப்பதும் கடினமாகிவிடும். இதை நம்பிக்கையாளர்களின் தாய் ஆயிஷா (ரழி) ‘முதல் வெளிப்பாடு ‘மது அருந்தாதீர்கள்’ என்று வந்திருந்தால், அவர்கள் ‘நாங்கள் மதுவை ஒருபோதும் விடமாட்டோம்’ என்று சொல்லியிருப்பார்கள். மேலும் விபசாரம் செய்யாதீர்கள் என்று வந்திருந்தால், ‘நாங்கள் விபசாரத்தை ஒருபோதும் விடமாட்டோம்’ என்றும் சொல்லியிருப்பார்கள்’ என்று கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு அல்-கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘மனிதர்களின் உள்ளங்களை அவர்கள் பழகிய ஆசைகளிலிருந்து பிரிப்பது மிகவும் கடினமானது. அந்த வகையில் ஹிஜ்ரத்திற்குப் பின் இஸ்லாம் நிலைநிறுத்தப்பட்டபோது மனங்கள் தௌஹீதிலும் தொழுகையிலும் உறுதியடைந்து, குர்ஆன் கட்டளைகளுக்கு பழகிய பின்னரே நோன்பு கட்டாயமாக்கப்பட்டது. அவர்கள் அதற்கு படிப்படியாக வழிநடத்தப்பட்டனர்’ என்றுள்ளார்.

நவீன கால இஸ்லாமிய அறிஞர் ஒருவர் குறிப்பிடும் போது, ரமழான் நோன்பு இரண்டு கட்டங்களாக கடமையாக்கப்பட்டது என்றுள்ளதோடு முதல் கட்டம், தேர்வுக்கட்டமாகும். இக்கட்டத்தில், நோன்பு நோற்கத் தகுதியான ஒருவருக்கு இரண்டு தேர்வுகள் வழங்கப்பட்டன. நோன்பு நோற்பது சிறந்தது. அல்லது நோன்பை விடுத்து, ஒரு ஏழைக்கு உணவளிக்க முடியும் (பரிகாரம்).

‘ஈமானுடையோரே…! உங்களுக்குமுன் இருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டதுபோல, உங்களுக்கும் நோன்பு விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தக்வா பெறுவதற்காக. அது கணக்கிட்ட சில நாட்களே… உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருப்பவராகவோ இருந்தால், பிற நாட்களில் அதை ஈடு செய்யட்டும். நோன்பு நோற்கத் தகுதியுள்ளவர்களில் (கஷ்டத்துடன் நோற்கிறவர்கள்) ஒரு ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். ஆனால் யார் தன்னார்வமாக அதிக நன்மை செய்கிறாரோ, அது அவருக்கே சிறந்தது. நீங்கள் அறிந்திருந்தால், நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்தது’. (அல்-பகரா 2:183–184)

எனவே, விரும்பியவர் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் நோன்பை விடுத்து பரிகாரம் வழங்கலாம்.

இரண்டாம் கட்டம், கட்டாயமாக்கப்பட்ட கட்டமாகும். இக்கட்டத்தில் நோன்பு கட்டாயமாக்கப்பட்டது. முன்னர் வழங்கப்பட்ட தேர்வு இரத்துசெய்யப்பட்டது. ‘மனிதர்களுக்கான வழிகாட்டுதலாகவும் தெளிவான சான்றுகளாகவும் குர்ஆன் இறக்கப்பட்ட ரமழான் மாதம். உங்களில் யார் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாகவோ பயணத்தில் இருப்பவராகவோ இருந்தால், பிற நாட்களில் அதை ஈடு செய்யட்டும். அல்லாஹ் உங்களுக்கு எளிமையையே விரும்புகிறான்; கஷ்டத்தை அல்ல. நீங்கள் காலத்தை நிறைவு செய்து, அல்லாஹ் உங்களை வழிநடத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்தி நன்றியுள்ளவர்களாக இருப்பதற்காக’. (அல்-பகரா 2:185)

ஸஹீஹ் அல்-புஹாரி மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் ஆகியவற்றில் ஸலமா இப்னு அல்-அக்வா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள நபிமொழியொன்றில், ‘நோன்பு நோற்கத் தகுதியுள்ளவர்களுக்கு ஒரு ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம்’ என்ற வசனம் இறங்கியபோது, விரும்பியவர் நோன்பை விடுத்து பரிகாரம் வழங்க முடிந்தது. பின்னர் ‘உங்களில் யார் மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ என்ற வசனம் இறங்கி அந்த அனுமதியை இரத்து செய்தது.

அல்லாஹ் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு நோன்பை கட்டாயமாக்கி, நோயாளிகளுக்கும் பயணிகளுக்கும் அதை விடுவதற்கான அனுமதியை வழங்கினான். நோன்பு நோற்க இயலாத முதியவர்களுக்கும் குணமடைய முடியாத நிரந்தர நோயாளிகளுக்கும் மட்டுமே பரிகாரம் (ஃபித்யா) வழங்கும் வாய்ப்பு சட்டமாக மீதமிருந்தது. இது இஸ்லாம் சட்டங்களை விதிப்பதிலும் தடைசெய்வதிலும் கடைப்பிடிக்கும் எளிமையை அடிப்படையாகக் கொண்ட ஞானமிக்க முறையை பிரதிபலிக்கிறது.

அதுபோன்றே, இதற்கு முன் ஆஷூரா தின நோன்பு நோற்பது அமுலிலிருந்தது. ஆனால், ரமழான் நோன்பு கட்டாயமானபின், ஆஷூரா நோன்பு விருப்பமானதாக மாறியது. கட்டாய கட்டம் இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. அவற்றில் முதல் நிலை கடுமையானது. இரண்டாவது நிலை தளர்வையும் கருணையையும் கொண்டது. ஆரம்பத்தில், முஸ்லிம்கள் தூங்காதவரை அல்லது இஷா தொழுகையை நிறைவேற்றாத வரை மட்டுமே உணவு, பானம் மற்றும் தம்பதியுறவு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஒருவர் தூங்கிவிட்டாலோ அல்லது இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டாலோ, அடுத்த இரவு வரை இவை அனைத்தும் தடைசெய்யப்பட்டன.

மதீனாவைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் நாள் முழுவதும் உழைத்தார். நோன்பு திறக்கும் நேரத்தில் அவரது மனைவி உணவு எடுக்கச்சென்றார். அவர் திரும்பியபோது, கடும் சோர்வால் அவர் உணவு உண்ணாமல் தூங்கிவிட்டதை கண்டார். மறுநாள் மதியம் அவர் மயங்கி விழுந்தார்.

இவ்வாறான சில சம்பவங்களின் பின், இறுதியான கட்டமாக இவ்வசனம் இறங்கியது,’நோன்பு இரவுகளில் உங்கள் மனைவிகளுடன் நெருக்கமாக இருப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு உடையாகவும், நீங்கள் அவர்களுக்கு உடையாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே துரோகம் செய்ததை அல்லாஹ் அறிந்தான். ஆகவே அவன் உங்களை மன்னித்து கருணை காட்டினான். இப்போது அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ் உங்களுக்கு நிர்ணயித்ததைத் தேடுங்கள். விடியற்காலையின் வெள்ளை நூல் கருப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணவும் குடிக்கவும், பின்னர் இரவு வரை நோன்பை நிறைவுசெய்யுங்கள். மஸ்ஜித்களில் இஃதிகாஃப் நிலையில் இருக்கும் போது அவர்களை அணுகாதீர்கள். இவை அல்லாஹ்வின் எல்லைகள். மக்கள் தக்வா பெறுவதற்காக அல்லாஹ் தனது அடையாளங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்’. (அல்-பகரா 2:187)

இவ்வசனம் இறங்கியதும் முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். இது இரவு முழுவதும் விடியற்காலை வரை உணவு, பானம் மற்றும் தம்பதியுறவை அனுமதித்தது.

இந்த படிப்படியான அணுகுமுறையை நாம் சீரற்ற ஒரு விடயமாக நோக்க முடியாது. அதன் பின்னால் பல நோக்கங்கள் உள்ளன. அவைகளாவன,

அடியார்கள் மீது கருணையும் அன்பும்: இஸ்லாத்திற்கு முன்னைய அரபுகள் ஒழுங்கான வழிபாடாக நோன்பை பழகியிருக்கவில்லை. ஆரம்பத்தில் அது அவர்களுக்கு கடினமாக இருந்தது. ஆகையால் அல்லாஹ் அவர்களை ஒரே நேரத்தில் கடினமான கட்டளையால் சுமையாக்கவில்லை. அவர்களைப் படிப்படியாகத் தயார்படுத்தினான். இது இஸ்லாம் எளிமையின் மார்க்கம் என்பதைக் காட்டுகிறது.

ஆன்மீகப் பயிற்சி: அல்லாஹ் முதலில் தேர்வை வழங்கி, கீழ்ப்படிதலுக்கு அவர்களின் உள்ளங்களை பழக்கப்படுத்தி அதன் பலனை விரும்பச் செய்தார். ‘நீங்கள் நோன்பு நோற்பது உங்களுக்குச் சிறந்தது’ என்ற வசனம் ஊக்கமும் உற்சாகமும் அளித்து, மனம் வெறுப்போ சுமையோ இல்லாமல் விருப்பத்துடன் நோன்பை ஏற்க உதவியது. இறைவனுக்கு கீழ்ப்படிதலின் உண்மை யதார்த்தம் அவர்களின் இதயங்களில் நிலைபெற்ற பின், இந்த நன்மையை உறுதியாக நிலைநிறுத்தும் கட்டாய கட்டளை வந்தது.

படிமுறை விதி – ஒரு அடிப்படை சட்டமுறை: பெரும்பாலான முக்கிய சட்டங்களில் அல்லாஹ்வின் சட்டமியற்றும் முறை இதுவேயாகும். மனித மனங்கள் திடீரென மாறுவதில்லை. ஆழமாகப் பதிந்த பழக்கங்களுக்கு மாற்றம் வர காலம் தேவை. இதனால் நாம் – அழைப்பாளர்களும் கல்வியாளர்களும் – மக்களை மென்மையுடனும் படிப்படியாகவும் வழிநடத்த வேண்டும். நன்மைக்குச் அழைக்கும் போது அவர்களின் நிலைமைகளையும் திறன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய ஷரீஆவின் பூரண நிலை: இந்த படிப்படைத்தன்மை, இஸ்லாமிய சட்டம் மனித இயல்பை கருத்தில் கொண்டு அதை முழுமைக்குத் தள்ளிச் செலுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அது இயல்புக்கு எதிராக மோதுவதில்லை. மாறாக அதைச் சீரமைத்து, உயர்த்தி, படிப்படியாக மிக உயர்ந்த நிலைகளுக்கு கொண்டு செல்கிறது.

எனவே, இவ்வாறு முழுமையாக நோக்குகையில் இஸ்லாம் எவ்வாறு எமக்கு இலகுவை நாடுகிறது. எம் நலன்களை கருத்திற்கொள்கிறது என்பது எமக்கு தெளிவாகிறது.

அஷ் ஷெய்க்
ஷம்லான் ஜாபிர்…

Post a Comment

0 Comments