
இஸ்லாம் சில காலங்களுக்கும், சில புனித தலங்களுக்கும் அபரிமிதமான சிறப்புகளை கொடுத்து அழகு பார்க்கிறது. அந்த வகையில் சில புனித தலங்களில், சில காலங்களில் வணக்க வழிபாடு புரியும்போது மற்ற புனித தலங்களில், மற்ற காலங்களில் நிறைவேற்றப்படும் வணக்கத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட பல மடங்கு நன்மைகள் வாரி வழங்கப்படுகிறது.
புனித இறையில்லம் கஃபாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறை இல்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஒரு இலட்சம் மடங்கு சிறந்ததாகும்.
புனித மதீனாவில் நிறைவேற்றப்படும் ஒரு தொழுகை மற்ற இறையில்லங்களில் நிறைவேற்றப்படும் தொழுகையை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும்.
‘நன்மையை நாடி மூன்று இறை இல்லங்களைத் தவிர வேறெங்கும் பயணம் மேற்கொள்ளப்படலாகாது. அவை: மக்காவிலுள்ள புனித கஃபா, மதீனாவிலுள்ள மஸ்ஜித்நபவி, ஜெருஸத்திலுள்ள மஸ்ஜித் அக்ஸா (பைத்துல் முகத்திஸ்) ஆகியவாகும் என நபி (ஸல்) கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)
புனித தலங்களுக்கு வழங்கிய அதே சிறப்பை இஸ்லாம் சில காலங்களுக்கும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. துல்ஹஜ் மாதம் முதல் பத்து தினங்கள் சிறந்த நாட்களாக அமைகிறது. ஏனெனில் அந்த பத்து நாட்களிலும் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான கலிமா, தொழுகை, நோன்பு, தானதர்மங்கள், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒரு சேர நிறைவேற்றப்படுகின்றன.
இந்த பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் நல்லறம் எதுவாயினும் மற்ற மாதங்களில் நிறைவேற்றப்படும் நல்லறங்களை விட சிறந்ததாக அமைந்து விடுகின்றன. இவ்வாறு இரண்டு பெருநாட்களும் சிறந்த நாட்களாக அமைகின்றன. முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் குறிப்பாக அதில் வரும் 9,10 ஆகிய இரு தினங்களும் முக்கிய தினங்களாகும்.
இதன் வரிசையில் ரமழான் மாதமும் இணைகிறது. ரமழானில் மூன்று பத்து தினங்கள் உண்டு. அவற்றில் சிறந்தது கடைசி பத்து தினங்களாகும்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘ஆதமின் மகனுடைய ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன, நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரிய தாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காக தனது உணர்வையும், உணவையும் கைவிடுகிறான் என இறைவன் கூறுகின்றான்’ என்று கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)
மேலும் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (ஆதாரம்: முஸ்லிம்)
ரமழானில் ஒரு நோன்புக்கு பத்து மடங்குகள் நன்மை வழங்கப்படுவதால் ஒரு மாதம் நோன்பு நோற்றதற்கு 10 மாதங்கள் நோன்பிருந்த நன்மை கிடைத்துவிடுகிறது.
அதைத்தொடர்ந்து பெருநாளை விட்டு விட்டு பிறகு வரும் ஆறு நாட்கள் நோன்பை தொடர்வதற்கும் 10 மடங்குகள் நன்மை வழங்கப்படும். 6 நாட்கள் நோன்பு நோன்பதற்கு இரண்டு மாத நோன்பின் நன்மை கிடைத்துவிடுகிறது. ஆக ரமழானிலும் நோன்பு நோற்று, ஷவ்வாலிலும் ஆறு நோன்பு நோற்றால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை உண்டு. எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு (நன்மை) உண்டு.’
(திருக்குர்ஆன் 6:160)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘நோன்பு (பாவங்களில் இருந்து காக்கும்) ஒரு கேடயம் ஆகும். அதனால் நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம், முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால், அல்லது கோபமாக பேசினால், ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்’ என கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)
நோன்பு பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அது மனிதர்களின் இச்சையைக் கட்டுப்படுத்தும் கேடயமாகும். நோன்பு கெட்ட வார்த்தைகளை பேசுவதையும், பொய்யான பேச்சுக்களை பேசுவதையும், பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தடுக்கக்கூடியதாகவும் விளங்குகிறது.
முட்டாள்தனமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும், சண்டை சச்சரவுகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும், தகாத பார்வைகளை தடுக்கும், பேராசைகளை அழிக்கும் கேடயம் தான் நோன்பு. விபசாரத்தில் இருந்து தடுத்து, கற்பைக் காக்கும். குடிப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்கும் கேடயமும் கூட நோன்பு.
அபூ உபைதா (ரழி) அவர்கள், ‘நோன்பு ஒரு கேடயம் ஆகும். அதனை உடைக்காமல் இருக்கும் வரை… என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்’ என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: நஸயீ, இப்னு மாஜா)
இவை இவ்வாறிருக்க, மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ, அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில், திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்கு சக்தி பெறவில்லையா, அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்’ எனக் கூறினார்கள்.
(ஆதாரம்: புஹாரி)
அதேநேரம் நோன்பு என்பது பசித்திருப்பது, தாகித் திருப்பது மட்டுமல்ல! தகாத காரியங்களில் இருந்து விலகி இருக்கவும் வேண்டும். இத்தகைய நோன்பே கேடயமாக அமைந்து நோன்பாளிகளை பாதுகாக்கிறது.
ஆகவே ரமழான் நோன்பு காலத்தை இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய பயன்படுத்தி உச்ச பயன்களைப் பெற்றுக் கொள்வோம்.
அபூ மதீஹா…



0 Comments